இலங்கையில் பெண் வைத்தியர் வன்புணர்வு: சிக்கிய சந்தேகநபர்

12 பங்குனி 2025 புதன் 06:52 | பார்வைகள் : 312
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்றும், அவர் கல்னேவ பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
32 வயதான பெண் வைத்தியர், கடமையை முடித்துக் கொண்டு, தன்னுடைய விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே, கத்தியை காண்பித்து, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி விட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். அவரை கைது செய்வதற்கு பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்த விசாரணையின் பிரகாரம் சந்தேகநபர், புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர், போதைப்பொருள் சம்பவம் தொடர்பாக தடுப்புக் காவலில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை (09) விடுவிக்கப்பட்டவர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
திங்கட்கிழமை (10) மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை, பெண் வைத்தியர் பணிபுரிந்த வார்டில் தனது கடமைகளை முடித்துவிட்டு, சம்பந்தப்பட்ட போதனா மருத்துவமனைக்கு எதிரே உள்ள மருத்துவ விடுதியில் உள்ள தனது அறைக்குச் சென்றுள்ளார்.
வைத்தியர் தனது விடுதி அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைய முயன்ற போது, கூர்மையான கத்தியுடன் அவள் பின்னால் வந்த சந்தேக நபர், திடீரென பெண் வைத்தியரை அறைக்குள் தள்ளி, கூர்மையான கத்தியை காட்டி மிரட்டி, கதவை மூடினார். பின்னர் அவர் அந்தப் பெண்ணை தனது படுக்கையறைக்குள் இழுத்துச் சென்று, கைகளையும் கால்களையும் கட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக, அந்த பெண் வைத்தியர் அனுராதபுரம் வைத்தியசாலையில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்பவத்திற்குப் பிறகு, சந்தேக நபர் தப்பி ஓடிவிட்டார். கட்டப்பட்டிருந்த கை, கால்களை அவிழ்க்க கடுமையாக போராடிய பெண் வைத்தியர், அவற்றை அவிழ்த்துக் கொண்டு உடலைக் கழுவிவிட்டு, 10 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபர், வைத்தியரின் அலைபேசியை திருடி சென்றுள்ளார். அதனை பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.