போர் நிறுத்தம்; அமெரிக்காவுக்கு அடிபணிந்தது உக்ரைன்!

12 பங்குனி 2025 புதன் 08:47 | பார்வைகள் : 311
கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா -உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரை சுமார் 30 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்வது தொடர்பான அமெரிக்க பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
அதோடு , ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்க பரிந்துரையை ஏற்றுக்கொண்ட நிலையில், உக்ரைனுக்கு வழங்கப்பட்டு சமீபத்தில் நிறுத்தப்பட்ட ராணுவ உதவிகளை மீண்டும் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைனுக்கு கடும் அழுத்தம் கொடுத்து, ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து டிரம்ப் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்தார் .
இந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் உக்ரைன் தரப்பு அதிகாரிகள், வான் வழி மற்றும் கடல் வழி தாக்குதல்களில் ஒரு பகுதி போர் நிறுத்தத்தை முன்மொழிந்தனர். மறுப்பக்கம் அமெரிக்கா சார்பில் ஒரு மாத காலத்திற்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்தது. போர் நிறுத்தம் செய்து, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்று உக்ரைனிடம் இன்று வலியுறுத்தினோம், அவர்கள் தரப்பில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நாங்கள் இதே விஷயத்தை ரஷியாவிடமும் எடுத்து செல்வோம். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.
தற்போது பந்து அவர்களிடம் தான் உள்ளது. அவர்கள் சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில், துரதிர்ஷ்டவசமாக இங்கு அமைதி திரும்ப என்ன தடையாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நாங்கள் முயற்சிப்போம், என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
அதேவேளை உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த இராணுவ உதவிகள் உடனடியாக மீண்டும் வழங்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.