21 ஆண்டுகளுக்கு பின் சவுந்தர்யா மரணத்தில் தொடரும் சர்ச்சை !

12 பங்குனி 2025 புதன் 10:21 | பார்வைகள் : 457
நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்றும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சவுந்தர்யா மரணித்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர் அளிக்கப்பட்டுள்ள புகாரால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அழகு தேவதையாக சினிமா உலகத்துக்குள் நுழைந்து பன்னிரெண்டே ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவை தனது நடிப்புத் திறமையால் ஆட்சி செய்தவர் சவுந்தர்யா. பெங்களூருவைச் சேர்ந்த சவுந்தர்யா முதலில் அறிமுகமான திரைப்படம் ‘பா நன்ன ப்ரீதிசு’ என்ற கன்னட படம் தான். எனினும், தமிழில் நாயகியாக அறிமுகமான பொன்னுமணி படம் தான் அவரை பிரபலமாக்கியது.
பொன்னுமணி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக உருவெடுத்தார் சவுந்தர்யா. ரஜினிகாந்துக்கு ஜோடியாக அண்ணாமலை, படையப்பா, கமல்ஹாசனுக்கு ஜோடியாக காதலா காதலா என ஹிட் படங்களைக் கொடுத்து, அழகாலும் நடிப்புத் திறமையாலும் புகழின் உச்சத்தை அடைந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். சூப்பர் ஹிட் தமிழ்ப் படமான சூர்யவம்சத்தின் ஹிந்தி ரீமேக்கான சூர்யவன்ஷம் படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக கலக்கினார் சவுந்தர்யா.
ஒரு பிஸியான ஹீரோயினாக வலம் வந்த போதே, 2003-ஆம் ஆண்டு தனது உறவினரான ரகு என்பவரை கரம் பிடித்தார். சவுந்தர்யா கடைசியாக நடித்த படம் 'ஆப்தமித்ரா.' தமிழில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் கன்னடப் பதிப்புதான் இந்தப் படம். இதை இயக்குனர் பி.வாசு இயக்கியிருந்தார்.
பின்னர், 2004-ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவர், தேர்தல் பரப்புரைக்காக தனது சகோதரர் அமர்நாத்துடன், செஸன்னா என்ற சிறிய விமானத்தில் பெங்களூருவில் இருந்து கரீம்நகருக்கு பயணித்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். சவுந்தர்யா விபத்தில் சிக்கிய போது, அவர் கர்ப்பமாக இருந்தார் என கூறப்பட்டது. செஸன்னா விமானம் சிதறியதில் சவுந்தர்யாவின் உடல் கிடைக்கவில்லை.
சவுந்தர்யா மரணமடைந்து 21 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது ஒரு புகார். ஏற்கெனவே மகனுடன் பொது வெளியில் தகராறு, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் என சர்ச்சைகளில் சிக்கிய நடிகர் மோகன் பாபு தான் சவுந்தர்யாவின் மரணத்திற்கு காரணம் என பகீர் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சிட்டிமல்லு, நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்றும், ஜல்பள்ளி என்ற கிராமத்திலுள்ள நிலத்தை மோகன் பாபு பெற நினைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நிலத்தை சவுந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் விற்பனை செய்வதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அவரின் மரணத்திற்குப் பிறகு அந்த நிலத்தை சட்டவிரோதமாக மோகன் பாபு ஆக்கிரமித்திருக்கிறார் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
கம்மம் பகுதி காவல் உதவி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அளித்துள்ள புகாரில், சர்ச்சைக்குரிய அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி ஆசிரமங்களுக்கும், ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகை சவுந்தர்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.