மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம்.. ஆனால் இந்தியை திணிக்கக் கூடாது: கேரள மந்திரி பேட்டி

12 பங்குனி 2025 புதன் 20:18 | பார்வைகள் : 169
மும்மொழிக் கொள்கை விஷயத்தில் மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. அந்த கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் அது இந்தி திணிப்புக்கு வழிவகுத்துவிடும் என்றும், தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவாக உள்ளன.
ஆனால், தனியார் பள்ளிகளில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மூன்றாவது மொழி கற்றுக்கொடுக்கும்போது, அரசுப் பள்ளிகளில் மட்டும் அந்த வாய்ப்பை மறுப்பது ஏன்? என பா.ஜ.க. கேள்வி எழுப்பி வருகிறது. இந்த விவாதம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைவர்கள் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாக கூறி உள்ளது.
இதுபற்றி கேரள மாநில உயர்கல்வித் துறை மந்திரி ஆர்.பிந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மாணவர்கள் பல மொழிகள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கேரள அரசு விரும்புகிறது. இதற்காக ஒரு சிறப்பு மையத்தைக்கூட நிறுவி உள்ளது. எனினும் இந்தி திணிப்பை எதிர்க்கிறது.
அனைத்து மொழிகளையும் ஏற்றுக்கொள்கிறோம். வெவ்வேறு மொழிகளை உள்வாங்கிக் கொள்வதும், ஒருங்கிணைப்பதும் ஆரம்பத்திலிருந்தே கேரள கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
கேரளாவின் நீண்ட கடற்கரையானது வரலாற்று ரீதியாக பல்வேறு வெளிநாட்டுக் குழுக்களை மாநிலத்திற்கு ஈர்த்துள்ளது. இது மொழியியல் பன்முகத்தன்மைக்கு வழிவகுக்கிறது. அப்போதிருந்து, நாங்கள் பல்வேறு வெளிநாட்டு மொழிகளையும் ஏற்றுக்கொண்டோம். இப்போது, எங்கள் கொள்கை, மாணவர்கள் பல மொழிகள் கற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதேயாகும். அதேசமயம் மலையாளத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.