Paristamil Navigation Paristamil advert login

கொரியாவில் நெருக்கடி : ஆசியாவுக்கான ஜனநாயக மீட்சி மற்றும் தலைமைத்துவ அழைப்பு

கொரியாவில் நெருக்கடி : ஆசியாவுக்கான ஜனநாயக மீட்சி மற்றும் தலைமைத்துவ அழைப்பு

12 பங்குனி 2025 புதன் 16:06 | பார்வைகள் : 208


தென்கொரியாவின் தற்போதைய இராணுவச் சட்டம் மற்றும் பதவி நீக்க நெருக்கடி குறித்து ஆசிய பத்திரிகையாளர் சங்கம் (AJA) கடந்த 4ஆம் திகதி சியோலில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியது.

கொரியா இந்த நெருக்கடியை விரைவாக சமாளித்து, மேலும் வலுவான ஜனநாயகம் மற்றும் தலைமைத்துவத்துடன் ஆசியாவுக்கு முன்மாதிரியாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று AJA இதன்போது வலியுறுத்தியது.

சியோலில் உள்ள கொரியா பத்திரிகை மையத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் AJA தலைவர் சோபல் சாய் (கம்போடியா), முன்னாள் துணைத் தலைவர் எடி சுப்ராப்டோ (இந்தோனேசியா), AJA துணைத் தலைவர் காங் சியோக்-ஜே (தென் கொரியா, முன்னாள் கொரியா ஹெரால்ட் பத்திரிகையாளர்) மற்றும் AJA நிறுவனத் தலைவர் லீ சாங்-கி (தி ஆசிய ஆன் வெளியீட்டாளர், முன்னாள் ஹான்கியோரே பத்திரிகையாளர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில் AJA "கொரியாவின் ஜனநாயக மீட்சிக்கு ஆதரவாக 1,000 ஆசிய பத்திரிகையாளர்களின் கையொப்பங்கள்" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
 
அந்த அறிக்கையில், "ஜப்பானிய காலனித்துவ ஆட்சியையும் கொரியப் போரையும் வென்று, தொழில்மயமாக்கல், ஜனநாயகமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலை அடைந்த கொரியா, நீண்ட காலமாக ஆசியாவின் முன்மாதிரி நாடாக இருந்து வருகிறது. இருப்பினும், சமீபத்திய அரசியல் குழப்பம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரியா இந்த நெருக்கடியை விரைவாக சமாளித்து, மேலும் வலுவாக வெளிப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டது.

மேலும் அந்த அறிக்கையில், கொரியாவின் வளர்ந்துவரும் உலகளாவிய செல்வாக்கு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 டிசம்பரில், கொரிய எழுத்தாளர் ஹான் காங் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்று ஆசியர்களை பெருமைப்படுத்தினார். சமீபத்திய ஆண்டுகளில் கொரியா கலாசாரம், விளையாட்டு, குறைக்கடத்தி தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறைகளில் உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது.

‘K-’ என்ற பிராண்ட் அடையாளத்துடன், கொரியா பல்வேறு துறைகளில் தனித்துவம் பெற்றுள்ளது.

உடனடியாக இந்த நெருக்கடியை சமாளிக்கவும், பிராந்திய பிரச்சினைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கவும் கொரியாவை இச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொரியாவின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசியல் நலன்களுக்கு மாறாக தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இச்சங்கமானது பெப்ரவரி மாதம் முதல் 30க்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளில் உள்ள உள்ளூர் பத்திரிகையாளர்களிடமிருந்து கையொப்பங்களை சேகரித்து வருகிறது. இதில் பங்கேற்கும் நாடுகளில் கம்போடியா, தென் கொரியா, மலேசியா, இலங்கை, ஈரான், கிர்கிஸ்தான், ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், லெபனான், ஆப்கானிஸ்தான், தாய்வான், நேபாளம், ஹொங்கொங், மங்கோலியா, கத்தார் மற்றும் லாவோஸ் ஆகியவை அடங்கும்.

ஆசிய பத்திரிகையாளர் சங்கமானது கொரியாவின் ஜனநாயக முன்னேற்றத்தைக் கண்காணித்து, கூடுதல் கையொப்பங்களைச் சேகரிக்க உறுப்பு நாடுகளுடன் தொடர்ந்து செயற்படும் என்றும் இந்த சந்திப்பு வேளையில் அறிவித்தது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்