பத்தாயிரம் ஏக்கரில் திராட்சைத் தோட்டம்! - வைன் தயாரிப்பின் முன்னோடி!!
30 வைகாசி 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18715
Cahors வைன் குறித்து உங்களுக்கு தெரிந்தே இருக்கும். பிரான்சின் மிக பிரபலமான வைன்!! இந்த வைனின் பின்னணி குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம்!!
பிரான்சின் தென்மேற்கு பகுதியின் Lot மாவட்டத்தில் உள்ள நகரமே இந்த Cahors!! இந்த நகரத்தின் பிரதான தொழிலே வைன் உற்பத்தி தான். மொத்தமாக பத்தாயிரம் ஏக்கரில் (4,200 ஹெக்டேயர்கள்) திராட்சை விளைந்து தொங்குகிறது.
சிவப்பு வைன் மிக பிரபலமாகவும், விற்பனையில் அதிகம் இருந்தாலும்... வெள்ளை வைன் மற்றும் ரோஸ் வைன் கூட இங்கு மிக பிரபலம்.
ரோம் நகரில் இருந்து தோற்றம் பெற்ற வைன் தான் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்றாலும்... கிருஸ்த்துக்கு முன் 50 களில் இங்கு திராட்சைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.
19 ஆம் நூற்றாண்டுகளில் எல்லாம் இந்த நகரில் உற்பத்தியாகும் ஒருவகை 'கறுப்பு வைன்' இங்கிலாந்து இரஷ்யா ஆகிய நாடுகளில் மிக பிரபலமாக விற்பனையானது.
1956 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இங்கு பெரும் உறை பனி படிந்தது. பத்தாயிரம் ஏக்கர் கொண்ட இந்த திராட்சை தோட்டம் அப்படியே அழிந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மீண்டும் திராட்சை வேளாண்மை செய்யப்பட்டது.
கடந்த 2007 ஆம் ஆண்டில் Cahors இல் உற்பத்தியாகும் வைன், ஆர்ஜண்டினாக்கு ஏற்றுமதியாக தொடங்கியது. தற்போது ஆர்ஜண்டினாவின் பிரதான வைன் இறக்குமதி, இங்கிருந்தே செய்யப்படுகிறது.
பிரான்சின் பல்வேறு தேசங்களில் வைன் உற்பத்தி செய்யப்பட்டாலும்... பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, விற்பனையில் சக்கை போடு போடும் வைனாகவும், பலரின் நன்மதிப்பை பெற்ற வைனாகவும் Cahors வைன் திகழ்கிறது.