தமிழக அரசு கூடுதல் வரி விதிப்பு: சிமென்ட் விலை உயரும் அபாயம்

14 பங்குனி 2025 வெள்ளி 10:48 | பார்வைகள் : 255
சிமென்ட் நிறுவனங்கள் வெட்டியெடுக்கும் சுண்ணாம்புக்கல் மீது, 1 டன்னுக்கு 160 ரூபாயை தமிழக அரசு கூடுதல் வரியாக விதித்துள்ளதால், சிமென்ட் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிமென்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் சுண்ணாம்புக்கல் மீது கூடுதலாக, டன்னுக்கு 160 ரூபாய் வரி விதிக்கப்படும் என தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. இது, வரும் 20ம் தேதி அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சிமென்ட் நிறுவனங்கள், தங்கள் செலவு அதிகரிக்கும் என தெரிவித்துஉள்ளன.
நிலங்களில் இருந்து வெட்டியெடுக்கப்படும் சுண்ணாம்புக்கல்லுக்கு ஏற்கனவே ராயல்டி வசூலிக்கப்படும் நிலையில், கூடுதலாக வரி விதிப்பால், சிமென்ட் உற்பத்தி செலவு அதிகரிக்கும் என, ராம்கோ சிமென்ட்ஸ், டால்மியா பாரத் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, தமிழக நிலங்களில் இருந்து சிமென்ட் தயாரிப்புக்கு சுண்ணாம்புக்கல் பெறுவதில் ராம்கோ சிமென்ட் 52 சதவீதமும், டால்மியா பாரத் 23 சதவீதமும் பங்கு வகிக்கின்றன.
புதிய வரி விதிப்பால் இவற்றின் சிமென்ட் உற்பத்தி செலவு கணிசமாக அதிகரிக்கும். அல்ட்ராடெக் 4 சதவீதம், ஏ.சி.சி., 2 சதவீதம் எனும் அளவுக்கு மட்டுமே சுண்ணாம்புக்கல் பெறுவதால், இவற்றுக்கு பாதிப்பு குறைவு. சுண்ணாம்புக்கல்லை நிலத்தில் இருந்து சிமென்ட் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்வதற்கு முன், 1 டன்னுக்கு 160 ரூபாய் என்ற அளவில் இந்த வரியை முன்கூட்டியே செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சிமென்ட் தயாரிப்பில் 65 சதவீதம் வரை சுண்ணாம்புக்கல் பங்கு வகிப்பதாலும், முக்கிய மூலப்பொருள் என்பதாலும், இந்த வரி விதிப்பால், தங்கள் லாபம் பாதிக்கப்படும் என நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எனவே, வரி விதிப்பை அப்படியே சிமென்ட் விலையில் அதிகரித்து வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதைத் தவிர, சிமென்ட் நிறுவனங்களுக்கு வழியில்லை என்றும் அத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வர்த்தக போட்டியால், தமிழகத்தில் குறைவாக இருந்து வந்த சிமென்ட் விலை, விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* தமிழக அரசின் புதிய வரி விதிப்பால் சிமென்ட், மூட்டைக்கு 10 ரூபாய் உயரக்கூடும்
* தமிழகத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் கூடுதல் வரி விதிக்கக்கூடும்