ஒரே ஒரு மாவட்டம் உள்ள மாகாணம்!
4 வைகாசி 2017 வியாழன் 14:30 | பார்வைகள் : 18342
ஒரு சிறு நகரம்.. அதன் பின்னர் சில நகரங்கள் சேர்ந்து ஒரு மாவட்டம். அதன் பின்னர் சில மாவட்டங்கள் சேர்ந்து ஒரு மாகாணம். இது கேள்விப்பட்ட ஒன்று தான். ஆனால் ஒரு மாகாணத்தில் ஒரே ஒரு மாவட்டம் மாத்திரம் தான் உள்ளதென்றால் எப்படி?? அதுவும் நம்ம பிரான்சில்??!!
பிரான்ஸ் மொத்தம் 18 மாகாணங்களால் ஆனது என்பது உங்களுக்குத் தெரியும். இதில் 12 மாகாணங்கள் தான் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு பிரதான நிலப்பரப்பாக உள்ளது. ஏனைய 6 மாகாணங்களும் தனித்தனி தீவுகளாக சிதறிக்கிடக்கின்றன. அதில் ஒன்று தான் Mayotte எனும் தனித்தீவு!! பிரெஞ்சுத்தீவு!! ஒரே ஒரு மாவட்டத்தைக்கொண்ட குட்டித்தீவு!!
மொத்தம் 374 சதுர கிலோ மீட்டர்கள் கொண்டது இந்த தீவு. இது ஒரு மாகாணம் + மாவட்டம். மொசாம்பிக் கடல் பிராந்தியத்தில் உள்ளது இந்த மாகாணம்.
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 569 பேர் படி, மொத்தம் 212,645 மக்கள் இங்கு வசிப்பதாக சமீபத்திய கணக்கு ஒன்று தெரிவிக்கின்றது.
இங்கு ஒரு விமான நிலையம் உள்ளது. Aéroport de Dzaoudzi-Pamandzi என அழைக்கப்படும் இந்த விமான நிலையத்தில் செயற்படுத்தப்படும் சேவைகள் அனைத்தும் பரிஸ் விமான நிலையங்களுக்கு வருகின்றது. விமான நிலையத்தில் அதி நீளமான ஓடுதளம் 2600 மீட்டர்கள் தான்.
இந்த மாகாணத்தில் வசிப்பவர்களில் அதிகளவான மக்கள் Shimaore எனும் மொழி பேசுகிறார்கள். 1993 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின் படி மொத்தம் 97,000 பேர் இந்த மொழியினை பேசுகிறார்கள். அருகே இருக்கும் மடகாஸ்கர் தீவில் இருந்து மருவி வந்த மொழி இது!!
மேலும் இங்கு வசிப்பவர்களில் அதிகளவானவர்கள் இஸ்லாமியர்களாகும். முதலில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் இங்கு குடியேறினார்கள். அதன் பின்னர் அரேபிய மக்கள் குடியேறினார்கள். தற்போது இது ஒரு இஸ்லாமிய மாகாணம் என குறிப்பிடும் அளவுக்கு இஸ்லாமியர்கள் பரவலாக வசிக்கின்றனர்.
கடல் கடந்து இருந்தாலும்.. பிரெஞ்சு மொழி குறைவாக பேசினாலும்.. நிலப்பரப்பும், அரசியலும், பொருளாதாரமும்... பிரான்ஸ் தான்!!