இந்தியாவுக்கு ஒன்றல்ல, பல மொழிகள் தேவை; பவன் கல்யாண் வலியுறுத்தல்

15 பங்குனி 2025 சனி 10:56 | பார்வைகள் : 222
நம் நாட்டுக்கு இருமொழிகள் பத்தாது, பல மொழிகள் அவசியம் என்று ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் வலியுறுத்தி உள்ளார்.
ஜனசேனா கட்சியின் 12ம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் காக்கிநாடாவில் நடைபெற்றது. இதில் துணை முதல்வரும், கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கலந்து கொண்டார். கட்சி நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது; நாட்டுக்கு இரண்டு மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. மொழியியல் பன்முகத்தன்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது நாட்டின் ஒருமைப்பாட்டை பேணுவதற்கு மட்டும் அல்லாமல், அன்பையும், ஒற்றுமையையும் வளர்க்கும்.
நம் நாட்டில் பல மொழிகள் இருப்பது நல்லது. தமிழக அரசியல்வாதிகள் ஏன் ஹிந்தியை எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தமிழ் படங்களை ஹிந்தியில் டப் செய்து வெளியிட அனுமதிக்கின்றனர்.
சமஸ்கிருதத்தை சிலர் ஏன் விமர்சிக்கின்றனர் என்றே என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை. ஆனால், ஹிந்தி தேவையில்லையா? இது என்ன வகையான தர்க்கம்?
இவ்வாறு அவர் பேசினார்.