Paristamil Navigation Paristamil advert login

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதில் இந்தியாவுக்கு ரூ.1,244 கோடி வருவாய்

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதில் இந்தியாவுக்கு ரூ.1,244 கோடி வருவாய்

15 பங்குனி 2025 சனி 12:09 | பார்வைகள் : 240


வெளிநாட்டு செயற்கைகோள்களை ஏவியதில் நம் நாட்டுக்கு, கடந்த 2015 - 24 வரையிலான காலக்கட்டத்தில், 1,244 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பல்வேறு விண்வெளி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியதை அடுத்து, விண்வெளி துறையில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

'ககன்யான்' திட்டம்

நிலவின் தென் துருவத்தில், 'சந்திரயான் - 3' விண்கலத்தை 2023ல் வெற்றிகரமாக தரையிறக்கியதை அடுத்து, நிலவில் வெற்றிகரமாக இந்தியா கால் பதித்தது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'ககன்யான்' திட்டம் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட உள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்த சாதனைகள், நம் நாட்டின் விண்வெளி பொருளாதாரத்தை உயர்த்தியது மட்டுமின்றி, நம் நாட்டின் தனியார் விண்வெளி துறைக்கான இயந்திரங்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தையும் பெற்று தந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, 2035ல் சர்வதேச விண்வெளி நிலையம் அமைப்பது, 2040ல் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புவது உள்ளிட்ட திட்டங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில், குறிப்பாக 2020க்கு பின், இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க துவங்கிய பின், பல்வேறு தனியார், 'ஸ்டார்ட் - அப்' நிறுவனங்கள் நம் விண்வெளி துறைக்கு வலுவான துாணாக அமைந்துள்ளன.

கையெழுத்து

இந்நிலையில், மத்திய உள்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

கடந்த 2015 ஜனவரி முதல் 2024 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், 393 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மற்றும் மூன்று இந்திய வாடிக்கையாளர்களின் செயற்கைக்கோள்களை, நாம் விண்ணில் ஏவியுள்ளோம்.

இதன் வாயிலாக நம் நாட்டுக்கு, அன்னிய செலாவணி மூலம் 1,244 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நாம் இதுவரை, 34 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளோம். இதில் வளர்ந்த நாடுகளும் அடங்கும்.

எந்தெந்த நாடுகள்?

அமெரிக்கா - 232, பிரிட்டன் - 83, சிங்கப்பூர் - 19, கனடா - 8, கொரியா - 5, லக்ஸம்பெர்க், இத்தாலி தலா 4, ஜெர்மனி, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ் தலா 3, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஜப்பான், இஸ்ரேல், ஸ்பெயின் தலா 2, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரியா தலா 1 என செயற்கைக்கோள்களை நாம் விண்ணில் ஏவியுள்ளோம்.

தற்போது மேலும், 61 நாடுகளுடன் விண்வெளி கூட்டுறவுக்கான ஆவணங்கள் கையெழுத்தாகி உள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்