கேள்விகளால் ஒரு வேள்வி! - Jean-Jacques Bourdin ஒரு அறிமுகம்!!
3 வைகாசி 2017 புதன் 16:30 | பார்வைகள் : 18864
'பூதான்' என பெயர் வைத்ததற்கு பதிலாக பூகம்பம் என பெயர் வைத்திருக்கவேண்டும்.
தொலைக்காட்சியில் #BourdinDirect என நிகழ்ச்சி செய்து, அரசியல் தலைவர்களை வறுத்தெடுக்கும் இந்த Bourdin யார்?? இதோ ஒரு சிறு அறிமுகம்.
Bourdin பிறந்தது, ஐந்து குழந்தைகள் உள்ள ஒரு ஏழை வீட்டில்..! அப்பா சிறிய வியாபாரி.. அம்மா வீட்டு வேலைகளை கவனிப்பவர். மிக கட்டுக்கோப்பான... கறாரான குடும்பம். அதன் வழியே அச்சொட்டாக 'கறார்' பேர்வழியாக உருமாறியவர் தான் Bourdin. ஜூன் 15, 1949 ஆம் ஆண்டு Colombes இல் பிறந்த இவருக்கு தற்போது 67 வயது.
RMC வானொலியின் பணிப்பாளராக இருந்து, 2007 ஆம் ஆண்டு BFMTV க்கு பணிக்கு சேர்ந்தார். RMC வானொலியில் அவர் அரசியல்வாதிகளை கேள்விகளால் துளைத்தெடுத்தார். அந்த நிகழ்ச்சி 'ஹிட்டோ ஹிட்!' அடிக்க... வானொலியின் தாய் நிறுவனம் BFMTV இல், BourdinDirect எனும் அதே பெயரில் நிகழ்ச்சி செய்ய கேட்டுக்கொண்டார்கள். அதன் பின்னர் அவர் வாழ்வில் ஏறுமுகம் தான்.
1965 ஆம் ஆண்டு அது. Bourdin தனது 16 வது வயதில் தனது தந்தையுடன் சேர்ந்து அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் Jean-Louis Tixier-Vignancourக்காக தெரு தெருவாக சுவரொட்டிகளை ஒட்டினார்.
இலக்கியம் படித்திருந்தாலும், Bourdinக்கு வேலைகள் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த வேலைகளை பார்க்கத்தொடங்கினார். பொருட்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் ஏஜெண்டாக பணி புரிந்தார். மருத்துவ விற்பன்னராக இருந்தார், வாகன சாரதி, காப்பீடுகளுக்கு ஆட்கள் சேர்த்தார்... இதன்போதெல்லாம் Bourdin கற்றுக்கொண்டதெல்லாம் நன்றாக பேசத்தான்!!
முதன் முறையாக RTL வானொலியில், விளையாட்டுச்செய்திகளை அறிவிப்பதற்கான வேலை ஒன்று கிடைத்தது. அதன் பின்னர் விளையாட்டுச்செய்தி ஆசிரியராக உருமாறினார். பின்னர் இவரின் விளையாட்டு கண்ணோட்டம் பத்திரிகைகளில் வெளிவரத்தொடங்கின.
அதன் பின்னர், 2001 ஆம் ஆண்டு RMC வானொலியில் வேலை கிடைத்தது. காலையில் புது புது தகவல்களை சொல்லி.. நேயர்களோடு உரையாட வேண்டும். பல சமூக கருத்துக்களை கேட்டு.. அவர்களின் கருத்துக்களை வானொலி ஊடாக பதிவு செய்து வந்தார். அதன் பின்னர், அதே நிகழ்ச்சியில் பல அரசியல்வாதிகளை நேர்காணல் செய்தார். அதன் போது பல மக்கள் பிரச்சனையை அரசியல்வாதிகளிடம் நேரடியாக கேட்க, நிகழ்ச்சி சூடு பிடித்தது. அதன் பின்னர்... முற்றாக அரசியல் + அரசியல்வாதிகளின் நேர்காணல் என வானொலியில் அசரடித்தார்!!
Bourdin and Co எனும் அந்த வானொலி நிகழ்ச்சியை 2007 ஆம் ஆண்டு Bourdin Direct எனும் பெயரில் BFMTV இல் தொகுத்து வழங்கினார். Bourdin என்றாலே பயம். அவர் கேட்கும் கேள்விகள் அப்படி! நிக்கோலா சர்கோஷியில் இருந்து பிரான்சுவா ஒலோந்து, மரீன் லூ பென், இம்மானுவல் மக்ரோன் வரை யார் சிக்கினாலும் 'சிக்ஸர்'தான் பூதானிடம்!!
இப்போது இந்த கட்டுரையின் முதல் பந்தியை வாசிக்கவும்!!