என்னவொரு அற்புதமான கோல்! வைரலாகும் ரொனால்டோவின் வீடியோ

15 பங்குனி 2025 சனி 10:37 | பார்வைகள் : 247
சவுதி ப்ரோ லீக் தொடரில் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் க்ஹோலூத் அணியை வீழ்த்தியது.
அல்-அவ்வல் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அல் க்ஹோலூத் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே அல் நஸர் அணிக்கு கோல் கிடைத்தது. மானே பாஸ் செய்த பந்தை டூரன் கோல் செய்ய முயற்சிக்க கோல் கீப்பர் தடுத்தார்.
ஆனால், வெளியே வந்த பந்தை கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மிரட்டலாக கோலாக மாற்றினார்.
அதன் பின்னர் 26வது நிமிடத்தில் சாடியோ மானே (Sadio Mane) அசால்ட்டாக கோல் அடித்தார். 41வது நிமிடத்தில் ஜோன் டூரன் அபாரமாக கோல் அடித்தார்.
மறுமுனையில் அல் க்ஹோலூத் அணி கோல் அடிக்க போராடியது. அல் நஸர் வீரர் நவாஃப் பௌஷல் எதிரணி வீரரின் காலினை இடறியதால், சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் அல் க்ஹோலூத் (Al Kholood) வீரர் ஷாட் அடித்தபோது, அல் நஸரின் அலி லஜமி உயர தாவியபோது அவரது காலில்பட்டு கோலாக மாறியது.
இதன்மூலம் அல் க்ஹோலூத் அணிக்கு கோல் கிடைத்தது. எனினும் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு போராட்ட வெற்றி என்று இதனை கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிட்டார். மேலும் அவர் அடித்த கோல் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.