ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்!

15 பங்குனி 2025 சனி 12:04 | பார்வைகள் : 787
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்கத்தில் அண்மையில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில், அடுத்ததாக அவர் இயக்கிய இட்லிக்கடை திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.
இதுதவிர நடிகர் தனுஷ் கைவசம் குபேரா திரைப்படமும் உள்ளது. இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இதில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து தற்போது இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும் ராஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதன் ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் நடிகர் தனுஷ், அடுத்ததாக தமிழில் அமரன் என்கிற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் தற்காலிகமாக டி55 என அழைக்கப்படுகிறது.
இப்படத்தை மதுரை அன்புச்செழியனின் மகள் தயாரிக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் ஷூட்டிங் எப்போது தொடங்கப்படும் என்கிற அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார்களாம். இதுவும் ஒரு பயோபிக் படமாக உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் தனுஷுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.