Paristamil Navigation Paristamil advert login

வேளாண் பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

வேளாண் பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

16 பங்குனி 2025 ஞாயிறு 14:46 | பார்வைகள் : 391


 முக்கிய அம்சங்கள் சிறப்பு தொகுப்பு டெல்டா அல்லாத, 29 மாவட்டங்களில் சராசரியாக, 34 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரித்து, உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதற்கு, இம்மாவட்டங்களில் சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 

இத்திட்டத்தின் கீழ், நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதை, 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

 முன்னேற்ற திட்டம்


திருவண்ணாமலை, நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பத்துார், திருநெல்வேலி, வேலுார், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கோவை ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள, 63,000 மலைவாழ் விவசாயிகள் பயன் பெறும் வகையில், மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன் கீழ் சிறுதானியங்கள் சாகுபடி, இடுபொருட்கள் வினியோகம், காய்கறி பயிர்கள் விரிவாக்கம், வேளாண் இயந்திரங்கள், மதிப்புகூட்டும் தொழில்நுட்பம், நுண்ணீர் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணைகள் அமைக்க மானியம் வழங்கப்படும். விவசாயிகள் கடன் அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உழவுக்கு மானியம்


தமிழகத்தில், 56 லட்சத்து, 41 ஏக்கர் மானாவாரி நிலங்களில், பருவ மழையை மட்டுமே ஆதாரமாக கொண்டு, பயிர் சாகுபடி நடந்து வருகிறது. இங்கு, 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்வதற்கு, 2.4 ஏக்கருக்கு 2,000 ரூபாய் வீதம் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்திற்கு, 24 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

ஆதிதிராவிடர்களுக்கு...


ஒருங்கிணைந்த பண்ணைகள், பசுமைக் குடில்கள், நிழல்வலை குடில்கள் அமைத்தல், சூரியசக்தி உலர்த்திகள், சூரியசக்தி பம்ப் மோட்டார்கள், மதிப்புகூட்டப்பட்ட இயந்திரங்கள், பண்ணை இயந்திரங்கள் வாங்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பங்கு தொகை செலுத்த, 60 முதல் 70 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

விதை கொள்முதல்


மாநில விதை மேம்பாட்டு முகமை வாயிலாக, 39,500 டன் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களின் உயர் விளைச்சல் ரக விதை உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

அரசு விதை பண்ணைகள் மற்றும் விவசாயிகளின் நிலங்களில், விதைப் பண்ணைகள் அமைத்து, விதை கொள்முதல் செய்யும் திட்டத்திற்கு, 250 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

தரமான சான்று விதைகளை குறித்த காலத்தில் விவசாயிகளுக்கு வழங்க, ஏழு அரசு விதை சுத்திகரிப்பு நிலையங்கள், 15.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்படும்.

வேளாண் காடுகள்


உயர் மதிப்புமிக்க அதிக பலனளிக்கும் மரங்களை சாகுபடி செய்து, விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில், வேளாண் காடுகள் திட்டம் ஊக்குவிக்கப்படுகிறது. சந்தனம், செம்மரம், மகோகனி, ஈட்டி போன்ற மரங்களை வளர்ப்பதற்கும், அவற்றை பதிவு செய்தல், வெட்டுதல், விற்பனைக்கு எடுத்து செல்லுதல் போன்ற அனைத்து நடைமுறைகளை எளிதாக்கவும், தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும்.

தொடர்ச்சி 2ம் பக்கம்

* முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள்

தமிழகத்தில் ஆண்டுதோறும், 4,000 வேளாண் பட்டதாரிகளும், 600க்கும் மேற்பட்ட வேளாண் பட்டயதாரர்களும் கல்வியை நிறைவு செய்கின்றனர். இவர்களின் படிப்பறிவும், தொழில்நுட்ப திறனும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், 1,000 இடங்களில், முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் மையங்களை, 10 லட்சம் முதல், 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க, 30 சதவீதம் மானியமாக, 3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்கு, 42 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இம்மையங்களில், விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படும். வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பூச்சி, நோய் மேலாண்மை தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும். நவீன தொழிற்நுட்பம், வேளாண் விளைபொருட்களை மதிப்புகூட்டுதல் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.

* விபத்து இழப்பீடு உயர்வு

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், சாகுபடி காலங்களில் கிடைக்கும் பணிகளை பொறுத்து அமைகிறது. இயற்கை பேரிடர்களால் பயிர் சாகுபடி பாதிக்கும் போது, விவசாயிகளுடன், வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்துக்கான இழப்பீடு, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

விபத்தால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கான நிதியுதவி, 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இயற்கை மரணத்துக்கான நிதியுதவி, 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாகவும், இறுதி சடங்கு நிதியுதவி, 2,500 ரூபாயில் இருந்து, 10,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

---

* மக்காச்சோளம் சாகுபடிக்கு ரூ.40 கோடி

மானாவரி நிலத்திலும் அதிக மகசூல் தந்து, விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்க செய்வதில், மக்காச்சோளம் பயிர் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில், 10 லட்சத்து, 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் வாயிலாக, 28 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மக்காச்சோளம் சாகுபடி வாயிலாக விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைப்பதற்கு, மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன் கீழ், 1.87 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய, 40.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மானியம் வழங்கப்படும். இதன் வாயிலாக, 79 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறுவர்.

---

இயற்கை விவசாயத்திற்கு ஊக்கத்தொகை

இயற்கை வேளாண்மையை பரவலாக்கம் செய்யும் வகையில், 37 மாவட்டங்களில், 12 கோடி ரூபாய் நிதியில், இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம், இரண்டு ஆண்டுகள் செயல்படுத்தப்படும். அதன்படி, இயற்கை வேளாண்மையில் ஈடுபடும், 7,500 விவசாயிகளை ஒருங்கிணைத்து, குழுக்கள் அமைக்கப்படும். இயற்கை வேளாண் பொருட்களை, பூமாலை வணிக வளாகம உள்ளிட்ட அரசு கட்டடங்களில் சந்தைப்படுத்த உரிய வசதிகள் செய்து தரப்படும்.

மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளை சேர்ந்த, 38,600 மாணவர்கள், இயற்கை வேளாண் பண்ணைகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். இயற்கை வேளாண் விளைபொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தி, ஏற்றுமதி செய்வதற்கு நச்சு மதிப்பீடு பரிசோதனைக்கான கட்டணத்திற்கு முழு மானியம் வழங்கப்படும். இயற்கை வேளாண் விவசாயத்திற்கு மாறும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* கரும்பு கொள்முதல் விலை ரூ.3,500

கரும்பு விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையுடன், ஒரு டன் கரும்பு கொள்முதலுக்கு, 349 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். இதனால், 1.30 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் பெறுவர். இதற்கு, 297 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். கரும்பு சாகுபடி பரப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு, 10.53 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்