மிக மோசமான உடல் பாதிப்புகளுடன் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

16 பங்குனி 2025 ஞாயிறு 06:40 | பார்வைகள் : 403
தற்போது விண்வெளியில் சிக்கித் தவிக்கும் இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் அடுத்த வாரம் பூமிக்குத் திரும்பும் நிலையில், அவர்கள் மிக மோசமான உடல் பாதிப்புடன் பல மாதங்கள் அவதிப்படலாம் என்றே கூறுகின்றனர்.
சுமார் 8 நாட்களுக்கான பணி திட்டத்துடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 9 மாதங்களாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மார்ச் 14ம் திகதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டுள்ள நாசாவின் புதிய விண்கலம் ஞாயிறன்று, மார்ச் 16ம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைகிறது.
இந்த நிலையில், தற்போது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரின் உடல் நிலை தொடர்பில் தகவல் கசிந்துள்ளது. இரு விண்வெளி வீரர்களுக்கும் baby feet என்ற ஒரு நிலைமை உருவாகியிருக்கும் என்றே கூறுகின்றனர்.
அதாவது அவர்கள் பாதங்கள் குழந்தைகளின் பாதங்கள் போல மிருதுவாக மாறும் ஒரு நிலை. இதனால் அவர்களால் நடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்த நிலை குணமாக பல மாதங்களாகலாம் என்றே கூறப்படுகிறது.
இன்னொன்று எலும்பு அடர்த்தி இழப்பு. கால்கள் வலுவிழந்த நிலையை அடுத்து ஈர்ப்பு விசையின் பற்றாக்குறை காரணமாக குறிப்பிடத்தக்க மற்றும் பெரும்பாலும் சரிசெய்ய முடியாத, எலும்பு அடர்த்தி இழப்பை ஏற்படுத்துகிறது.
நாசா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், விண்வெளி வீரர்கள் இந்த இழப்பை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைகள் எடுக்காவிட்டால், விண்வெளியில் ஒவ்வொரு மாதமும் அவர்களின் எடை தாங்கும் எலும்புகள் தோராயமாக ஒரு சதவீதம் அடர்த்தியை இழக்கும் நிலை ஏற்படும்.
பொதுவாக பூமியில் வெறுமனே நகர்வதன் மூலம் இறுக்கமடையும் தசைகள், விவெளியில் பல மாதங்களாக தங்கியிருப்பதால் பலவீனமடைகின்றன. மூன்றாவதாக விண்வெளி வீரரின் உடலில் இரத்த அளவும் சுருங்குகிறது.
ஏனெனில் இதயம் ஈர்ப்பு விசைக்கு எதிராக இரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியதில்லை, மேலும் மிகக் குறைவாக வேலை செய்ய வேண்டியிருக்கும். உடலில் இரத்தம் பாயும் விதமும் மாறுகிறது. சில பகுதிகளில் இரத்த ஓட்டம் மெதுவாக இருப்பதால் இரத்தக் கட்டிகளுக்கு வழிவகுக்கும்.
விண்வெளியில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் மிகவும் ஆபத்தான தாக்கங்களில் ஒன்று கதிர்வீச்சு வெளிப்பாடு ஆகும். பூமியின் வளிமண்டலமும் காந்தப்புலமும் மனிதர்களை அதிக அளவிலான கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், விண்வெளி வீரர்களுக்கு அத்தகைய பாதுகாப்பு இல்லை.
நாசா வெளியிட்டுள்ள தகவலின் படி, விண்வெளி வீரர்கள் முக்கியமாக மூன்று வகையான கதிர்வீச்சுகளுக்கு ஆளாகிறார்கள்.
இவற்றில் பூமியின் காந்தப்புலத்தில் சிக்கியுள்ள துகள்கள், சூரியனில் இருந்து வரும் சூரிய காந்தத் துகள்கள் மற்றும் விண்மீன் அண்டக் கதிர்கள் ஆகியவை அடங்கும்.
இதனால், பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவருக்கும் அடுத்த பல மாதங்கள் மிகுந்த போராட்டமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.