இரண்டாவது முறையாக WPL மகுடம் சூடிய மும்பை இந்தியன்ஸ்

16 பங்குனி 2025 ஞாயிறு 08:46 | பார்வைகள் : 661
மகளிர் பிரீமியர் லீக் கிண்ணத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.
மும்பை Brabourne மைதானத்தில் நடந்த WPL இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) 7 விக்கெட்டுக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.
அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) 44 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசினார். மரிஸன்னே கப், சாரனி மற்றும் ஜோன்ஸன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals) அணியில் ஷஃபாலி வெர்மா 4 ஓட்டங்களில் வெளியேறினார். மெக் லென்னிங், ஜெஸ் ஜோனஸன் தலா 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் மரிஸன்னே கப் அதிரடி காட்டினர்.
அணியின் ஸ்கோர் 66 ஆக உயர்ந்தபோது ஜெமிமா 30 (21) ஓட்டங்களில் அவுட் ஆனார். எனினும் வெற்றிக்காக மரிஸன்னே கப் போராடினார்.
18வது ஓவரில் நட் சிவர் வீசிய பந்தில் மரிஸன்னே கப் 40 (26) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், நட் சிவரின் துல்லியமான பந்துவீச்சில் 5 ஓட்டங்கள் மட்டுமே டெல்லி அணி எடுத்தது.
இதனால் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக WPL கிண்ணத்தை வென்றது.
இறுதிவரை களத்தில் நின்ற நிக்கி பிரசாத் 25 (23) ஓட்டங்கள் எடுத்தார். நட் சிவர் ப்ரண்ட் 3 விக்கெட்டுகளும், அமெலியா கெர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.