இப்பிடி ஒரு கொள்ளையா? - நீங்கல்லாம் எங்கப்பா இருக்கீங்க?
25 ஐப்பசி 2016 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18332
தலையை பிய்த்துக்கொள்ள வைக்கும் கொள்ளைச் சம்பவங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அதுவும் பிரெஞ்சு திருடர்கள் இருக்கிறார்களே... பலே கில்லாடிகள்! உலகின் அதிக மதிப்புள்ள கொள்ளைகள் உட்பட 'எப்பிடி சாத்தியம்?' என தலையை இடித்துக்கொள்ள வைக்கும் கொள்ளைகள் என அனைத்துக்கும் பெயர் போனது பிரான்ஸ். பணம், நகைகள், கடிகாரங்கள், கார்கள் முதற்கொண்டு ஒரு ஸ்கூட்டர் கூட விட்டு வைக்காமல் லாவிக்கொண்டு போய்விடுவார்கள்! இதோ... இதை பாருங்கள்... கடந்த 2015 ஆம் ஆண்டு பிரான்சில் 111,000 மகிழுந்துக்கள் திருடப்பட்டுள்ளனவாம். அடேயப்பா!!
மகிழுந்துகளில் அதிகம் திருடப்படுவது Smart ForTwo என அழைக்கப்படும் மகிழுந்து ஆகும். இரண்டு பேர் பயணிக்கக்கூடிய குட்டியூண்டு காரை இஷ்ட்டத்துக்கு திருடிச்செல்கிறார்களாம். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது லேண்ட் ட்ரோவர் (Land Rover, Range Rover Evoque) மகிழுந்தாகும். விலை அதிகம் கொண்ட இந்த மகிழுந்து நாடு கடத்தப்பட்டு விற்பனை செய்வதற்காக கடத்தப்படுகிறது என தெரிவிக்கிறார்கள்.
மகிழுந்து திருடர்களை பிடிப்பதற்காகவே காவல்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட ஜெர்மனிய காவல்துறையினருடன் பிரெஞ்சு காவல்துறையினர் அதிரடியாக சோதனை போட்டு 7 பேர் வரை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மகிழுந்துக்களை திருடுகிறீர்களே... நீங்கல்லாம் எங்கப்பா இருக்கீங்க?