மோட்டார் சைக்கிள் தரிப்பிட வசதி இல்லாமல் தவிக்கும் பரிஸ் வாசிகள்!!
5 ஐப்பசி 2016 புதன் 10:30 | பார்வைகள் : 18549
ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கி ஓட்டுவது பரிஸ் நகர வாசிகளுக்கு பெரும் சவாலான விஷயம் தான்!! நீங்கள் பரிசுக்குள் எங்கேயும் செல்வதற்கு தொடருந்தும், ட்ராமும் தான் சிறந்தது. உங்கள் ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள் நிச்சயம் கை கொடுக்காது. அதற்கு காரணங்கள் இல்லாமலில்லை!
பரிசுக்குள் ஸ்கூட்டர்கள் நிறுத்துவதற்கு போதிய தரிப்பிடங்கள் (Parking) இல்லை. நீங்கள் ஒரு நகரத்துக்குச் செல்கிறீர்கள் என்றால்... உங்கள் ஸ்கூட்டரை நிறுத்த பக்கத்து ஊருக்கு செல்லவேண்டி நேரிடலாம். இருக்கும் தரிப்பிடங்களில் எல்லாம் இரண்டு சக்கர வாகனங்கள் (2 Roues) நிறுத்த அனுமதி உள்ளதா என உறுதி செய்யவேண்டும். அண்ணளவாக ஒரு லட்சம் ஸ்கூட்டர்களுக்கு பார்க்கிங் வசதி தேவைப்படுகிறது என ஒரு ஆய்வு சொல்கிறது.
மேலும், உங்கள் ஸ்கூட்டர்களை தரிப்பிடம் தவித்து வேறு எங்கேயும் நிறுத்தினால் உங்களுக்கு குற்றப்பணமாக 35 யூரோக்கள் அறவிடப்படும். கொசுறுச் செய்தியாக நவம்பர் மாதத்தில் இருந்து ஸ்கூட்டர் ஓட்டும் போது கட்டாயமாக கையுறை அணிய வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இல்லையென்றால் அதற்கு 68 யூரோக்கள் குற்றப்பணம் + உங்கள் அனுமதி பத்திரத்தில் ஒரு புள்ளி குறைப்பு என சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கிறது. இதையெல்லாம் சமாளித்து நீங்கள் ஸ்கூட்டர் ஓட்டினால்... உங்களுக்கு எமது பாராட்டுக்கள்!