பள்ளி பாடப்புத்தகத்தில் ஹிந்தி திணிப்பில்லை: என்.சி.இ.ஆர்.டி.,

20 சித்திரை 2025 ஞாயிறு 06:07 | பார்வைகள் : 120
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான புதிய ஆங்கில வழி பாடப்புத்தகங்களின் தலைப்புகள் ஹிந்தியில் இருப்பது சர்ச்சையான நிலையில், பாடநுால் தயாரிப்பு நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி., இந்திய கலாசாரம் மற்றும் அறிவு மரபுகளை பிரதிபலிக்கும் வகையில் கவனத்துடன் பெயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டதாக விளக்கம்அளித்துள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான பாடப் புத்தகங்கள் தயாரித்து வழங்கப்படுகின்றன. தற்போது, புதிய தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் புதிய புத்தகங்களை வடிவமைத்து வழங்கி வருகிறது.
அதில், ஆங்கிலவழி பாடப்புத்தகங்களின் தலைப்புகள் மிருதங், சந்துார், பூர்வி, கணித பிரகாஷ் ஆகிய ஹிந்தி பெயர்களாக வைக்கப்பட்டு உள்ளன. இது, ஹிந்தி பேசாத மாநில குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக ஹிந்தியை திணிக்கும் முயற்சி என்று எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் பாடப் புத்தகங்களுக்கான புதிய பெயர்கள் குறித்து என்.சி.இ.ஆர்.டி., அளித்துள்ள விளக்கம்:
புதிய பாடப் புத்தகங்களுக்கு இந்திய கலாசாரம் மற்றும் அறிவு மரபுகளை பிரதிபலிக்கும் வகையில் கவனமாக பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகங்களின் பெயர்கள் இந்திய மொழிகளில் இருந்து எடுக்கப்பட்டவை. ஹிந்தி மொழியை மட்டும் சார்ந்தவை அல்ல. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான ஆங்கில பாடப்புத்தகம், கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் பிரபல வாத்தியமான மிருதங்கத்தின் பெயரால் 'மிருதங்' என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், ஏழாம் வகுப்பு பாடப்புத்தகம், 'பூர்வி' என பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு ராகத்தின் பெயர். இதேபோல், கணித பாடப்புத்தகத்துக்கான 'கணித பிரகாஷ்' என்ற பெயர் இந்தியாவின் பண்பட்ட கணித மரபை பிரதிபலிக்கிறது.
இந்த பெயர், குழந்தைகளிடையே இந்தியாவின் கணித பாரம்பரியம் குறித்த ஆர்வத்தைத் துாண்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பெயர்கள் வைப்பது நம் கலாசார மற்றும் அறிவியல் பாரம்பரியம் குறித்த ஆர்வத்தையும் துாண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.