இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல ஒரு கொள்கையின் ஆட்சி: முதல்வர் ஸ்டாலின்

20 சித்திரை 2025 ஞாயிறு 08:19 | பார்வைகள் : 122
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துாரில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், கலைஞர் கைவினை திட்டம் துவக்க விழா நேற்று நடந்தது. அதில், பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 8,951 பயனாளிகளுக்கு, 170 கோடி ரூபாய் மானிய கடன் வழங்கினார்.
பின், அவர் பேசியதாவது-:
மத்திய பா.ஜ., அரசு, விஸ்வகர்மா என்ற திட்டத்தை 2023ல் கொண்டு வந்தது. இந்த திட்டத்தில், 18 வகையான கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி, 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்றனர்.
எந்த திட்டமாக இருந்தாலும், அது சமூக நீதியை, சமத்துவத்தை நிலைநாட்டுகிற நோக்கத்துடன் இருக்க வேண்டும். ஆனால், விஸ்வகர்மா திட்டம் அப்படியானதாக இல்லை. அது, ஜாதிய பாகுபாடுகளை, குலத்தொழில் முறையை ஊக்குவிக்கிறது என்பதால், கடுமையாக எதிர்த்தோம்.
அது மட்டுமல்ல, விண்ணப்பித்தவர்களுக்கான குறைந்தபட்ச வயது, 18 என்று இருந்ததை பார்த்து, எனக்கு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் உண்டானது. 18 வயது என்பது, ஒரு மாணவர் உயர் கல்விக்காக கல்லுாரி செல்லும் வயது. அந்த வயதினரை படிப்பை விட்டு வெளியேற்றுவதும், அதுவும் குடும்ப தொழிலை செய்யச் சொல்வதும் தவறு.
குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழகம், இதை அனுமதிக்குமா? அந்த உணர்வோடு தான், அந்த திட்டத்தில், மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.
பாரம்பரிய தொழில் கட்டாயம் என்பது கூடாது; குறைந்தபட்ச வயது வரம்பை, 18ல் இருந்து 35 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று மாற்றங்களையும், மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
மத்திய அரசின் திட்டத்திற்கு பதிலாக, ஜாதிய பாகுபாடு காட்டாத திட்டமாக, கலைஞர் கைவினை திட்டம் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில், 18 தொழில்கள் தான் இருக்கின்றன. நம் கலைஞர் கைவினை திட்டத்தில், 25 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
மத்திய அரசு திட்டத்தில், விண்ணப்பதாரர் அவருடைய குடும்ப தொழிலை மட்டும் தான் பார்க்க முடியும். ஆனால், நம் திட்டத்தில், விரும்பிய எந்த தொழிலையும், யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த திட்டத்தில், 50,000 முதல் 3 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. விஸ்வகர்மா திட்டத்தில் மானியம் கிடையாது.
இதுவரை, 24,907 விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 8,951 பயனாளிகளுக்கு, 170 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
போராடும் இடத்தில் இருந்து, நாம் மாற்று திட்டத்தை உருவாக்கும் வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். இது, ஒரு கட்சியின் ஆட்சியல்ல; ஒரு கொள்கையின் ஆட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.