துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ரவி அறிவிப்பு

21 சித்திரை 2025 திங்கள் 14:03 | பார்வைகள் : 100
ஊட்டியில் வரும் 25, 26ம் தேதிகளில், கவர்னர் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்கிறார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.
அந்த தீர்ப்பில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா உட்பட, 10 மசோதாக்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊட்டியில் கவர்னர் ரவி தலைமையில், 25, 26ம் தேதிகளில், பல்கலை துணை வேந்தர்கள் மாநாடு நடக்கிறது. இதில், சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்கிறார்.
இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 'பல்கலை வேந்தராக கவர்னரே தொடர்கிறார். துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.