காஷ்மீரில் பயங்கரம்; பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் பலி

23 சித்திரை 2025 புதன் 06:08 | பார்வைகள் : 188
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் சுற்றுலா தலத்தில், ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில், வெளிநாட்டவர் இருவர் உட்பட, 28 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்புகிறார்.
ஜம்மு - காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பஹல்காம் மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி, நீண்ட பசுமையான புல்வெளிகள் காரணமாக, 'மினி சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படுகிறது.
சுற்றிலும் அடர்ந்த பைன் மரக் காடுகள் உள்ள இந்த பகுதியில், பல்வேறு மாநில சுற்றுலா பயணியர் இயற்கை அழகை ரசித்தபடி குதிரை சவாரி செய்வது வழக்கம். இப்பகுதி எப்போதும் சுற்றுலா பயணியர் நிறைந்து காணப்படும். இந்நிலையில், நேற்று பிற்பகல் 3:00 மணி அளவில் வழக்கம்போல் பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணியர் குவிந்திருந்தனர்.
தப்பி ஓட்டம்
அப்போது, ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், சுற்றுலா பயணியர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். துப்பாக்கி குண்டு சத்தத்தைக் கேட்டு சுற்றுலா பயணியர் அங்குமிங்கும் சிதறியடித்து ஓடினர். இந்த தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து பயங்கரவாதிகள் மலைப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டனர்.
இந்த கொடூர தாக்குதலில், சுற்றுலா பயணியர் 28 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல்அறிந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணியர் என்றும், அவர்கள் குஜராத், கர்நாடகா, தமிழகம், மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. உயிரிழந்தவர்களில் இருவர், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் - -இ- - தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளையான, 'ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்று உள்ளது.
இந்த தாக்குதலுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துஉள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், 2019ல், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதற்குப் பின், தற்போது தான், காஷ்மீரில் பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என, பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, சவுதி அரேபியா பயணத்தை பாதியிலேயே முடித்து பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழர்கள் காயம்
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்தவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த பரமேஸ்வரன், சந்துரு, பாலசந்திரன் உள்ளிட்ட சிலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோருக்காக, டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், 24 மணி நேரமும் இயங்கும், சிறப்பு உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை, 011 - 24193300, 92895 16712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.