டாஸ்மாக் ஊழல் பற்றி சட்டசபையில் பழனிசாமி பேச தடை

23 சித்திரை 2025 புதன் 12:15 | பார்வைகள் : 145
டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்களை பற்றி சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச அனுமதி மறுக்கப்பட்டதால், அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர். சபாநாயகருடன், பழனிசாமி காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் நேற்று, மின்சாரம், மதுவிலக்கு துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான விவாதத்தில், தி.மு.க.,வை சேர்ந்த மூவர், அ.தி.மு.க.,வை சேர்ந்த இருவர், காங்கிரசை சேர்ந்த ஒருவர் என, ஆறு பேர் பேச அனுமதிப்பதாக சபாநாயகர் அப்பாவு கூறினார்.
முதலில், அ.தி.மு.க.,வை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் பேசினார். கருணாநிதி கால தி.மு.க., ஆட்சியின் மின்வெட்டு குறித்தும், அதை சரி செய்வதற்கு ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அவர் விவரித்தார்.
அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எழுந்து, டாஸ்மாக் ஊழல் குறித்துப் பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அப்பாவு மறுத்தார். ''அ.தி.மு.க., தரப்பில் இன்னொரு எம்.எல்.ஏ., பேச இருக்கிறார். அவரிடம் இந்த விஷயத்தை பேசச் சொல்லுங்கள்,'' என்றார்.
அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து, பழனிசாமியை பேச அனுமதிக்குமாறு குரல் எழுப்பினர். 'அனுமதி தர முடியாது' என, சபாநாயகர் கூறினார்.
அப்போது நடந்த விவாதம்:
சபாநாயகர்: இந்த விவாதத்தில் பேசுவதற்கு, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் பெயரை நீங்கள் தான் எழுதிக் கொடுத்துள்ளீர்கள். ஒருவர் பேசிவிட்டார். இன்னொருவர் பேச இருக்கிறார். நீங்கள் இடையில் புகுந்து பேச வேண்டும் என்றால், எப்படி அனுமதிக்க முடியும்?
அமைச்சர் துரைமுருகன்: எதிர்க்கட்சி தலைவர் இடையில் பேசுவதற்கு சலுகை உண்டு. அவரது கட்சியின் இரண்டாவது எம்.எல்.ஏ.,வுக்குப் பதிலாக, எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்கலாம்.
பழனிசாமி: எங்கள் கருத்தை சபையில் பதிவு செய்ய விடாமல் தடுத்தால் எப்படி? நான் பேசுவதற்கு வாய்ப்பு கொடுங்கள்.
இதைத் தொடர்ந்து பழனிசாமி சில வார்த்தைகளை கூறினார். அவற்றை சபைக்குறிப்பில் ஏற்றக்கூடாது என்று சபாநாயகர் உத்தரவிட்டார்.
சபாநாயகர்: நான் உங்களை பேச அனுமதிக்க மாட்டேன். இங்கு உள்ள உறுப்பினர்கள் யாரும் உங்களுக்கு பயந்தவர்கள் இல்லை; நான் இருப்பதால், யாருக்கும் பயம் இல்லை. நீங்கள்
நினைத்ததை எல்லாம் இங்கே பேச முடியாது.
பழனிசாமி: நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
இதைத் தொடர்ந்து, சபை வராண்டாவில் நின்று, சபாநாயகருக்கு எதிராக அ.தி.மு.க.,வினர் கோஷங்கள் எழுப்பினர். ''வராண்டாவில் நின்று கோஷம் எழுப்பினால், நடவடிக்கை எடுப்பேன், என, சபாநாயகர் எச்சரித்தார்.
இதையடுத்து, அ.தி.மு.க.,வினர் வெளியேறினர்.
அமலாக்கத்துறையை
கண்டு நடுங்குகின்றனர்' எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி சபைக்கு வெளியே அளித்த பேட்டி: டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், பிற அலுவலகங்களிலும் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு பதிலே சொல்லவில்லை. இன்று அந்த துறையின் மானிய கோரிக்கை வந்ததால், பிரச்னையை எழுப்பினோம்.ஆனால், 'இதுகுறித்து பேச அனுமதிக்கவே மாட்டேன்' என்று, சபாநாயகர் கூறுகிறார். அதற்கு என்ன அர்த்தம்? இந்த அரசு வந்ததில் இருந்து, டாஸ்மாக்கில் நிறைய முறைகேடுகள் நடப்பதாக செய்திகள் வந்தபடி உள்ளன. ஒரு பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வாங்கினர். தினசரி, 1.50 கோடி பாட்டில்கள் விற்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு, 15 கோடி ரூபாய் ஊழல் செய்து, மாதத்திற்கு 450 கோடி, ஆண்டுக்கு 5,500 கோடி ரூபாய் சம்பாதித்து பல மட்டத்தில் பங்கு போட்டுள்ளனர். ஊழலை, மக்கள் பிரச்னைகளை, சட்டசபையில் தெரிவிப்பது எங்கள் கடமை. அதற்கு பதில் சொல்வது அரசின் கடமை. ஆனால், சபாநாயகர் பேச விடுவது இல்லை. இது, ஜனநாயகப் படுகொலை. அவர்கள் அமலாக்கத் துறையை கண்டு நடுங்குகின்றனர். 'நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், இதுகுறித்து பேச அனுமதிக்க மாட்டேன்' என்கிறார் சபாநாயகர். ஏனெனில், அவர்களால் பதில் சொல்ல முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.***
செந்தில் பாலாஜி பதிலுரை
அ.தி.மு.க., புறக்கணிப்பு மின்சாரம், மதுவிலக்கு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தை முடித்து வைத்து, அ.தி.மு.க., - செந்தில்குமார் பேசினார்.மின் கொள்முதல், மின் கட்டணம் உயர்வு, புதிய மின் திட்டங்கள், மதுக்கடைகள் தொடர்பாக, பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவருக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி உடனுக்குடன் பதில் அளித்தார். நேரம் முடிந்து விட்டதாகக் கூறி, தொடர்ந்து பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தார். அவரை பேச அனுமதிக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தினர். அதை ஏற்காத அப்பாவு, செந்தில் பாலாஜியை பதிலுரை ஆற்ற அழைத்தார். அதை கண்டித்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தலைமையில், அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.***