அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமின் வேண்டுமா: செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

24 சித்திரை 2025 வியாழன் 06:31 | பார்வைகள் : 100
செந்தில் பாலாஜி வழக்கில், சுப்ரீம் கோர்ட், அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது ஜாமின் வேண்டுமா என்று கேள்வி எழுப்பி உள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக பதிவான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ஆம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறையில் இருந்தார்.
அவருக்கு ஜாமின் பலமுறை மறுக்கப்பட்டது. கடைசியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோா்ட் உத்தரவின் அடிப்படையில் ஜாமின் அளிக்கப்பட்டது.
ஜாமீன் கிடைத்த மறுநாள் அவர் அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (ஏப்.23) சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, மாசிக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில், சட்டபூர்வமாக பொறுப்பு ஏற்றதாகவும் கோர்ட் விதித்த எந்த ஜாமின் நிபந்தனையையும் மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீதிபதிகள் கூறுகையில், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா? அல்லது ஜாமின் வேண்டுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் அவர் அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என்று எப்படி கூறமுடியும். அவருக்கு மெரிட் அடிப்படையில் ஜாமின் வழங்கவில்லை.
ஜாமின் அளித்தபோது அமைச்சராக பதவி ஏற்க அனுமதி வழங்கவில்லை. அமைச்சராக இல்லை என்பதாலேயே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்குவதை பரிசீலித்தோம்.
அவருக்கு ஜாமின் அளித்த போது அளித்த சூழல் வேறு. இப்போது உள்ள சூழல் வேறு. அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் ஜாமின் கோரினால் நீதிமன்றங்கள் என்ன முடிவு எடுக்கும்?
இந்த வழக்கினை ஏப் 28 வரை அவகாசம் வழங்கி ஒத்தி வைக்கிறோம். அன்றைய தினமம் அமைச்சர் பதவியா அல்லது ஜாமினா என்பது குறித்து செந்தில் பாலாஜி தரப்பு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.