யக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை கைது செய்யக் கோரி புகார்

23 சித்திரை 2025 புதன் 13:48 | பார்வைகள் : 169
அஜித்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, பிரியா வாரியர், சுனில், ஷைன் டாம் சாக்கோ, அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.
குட் பேட் அக்லி திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டையாடி வருகிறது. அதன்படி குட் பேட் அக்லி திரைப்படம் 250 கோடி வசூலை நோக்கி நகர்ந்து வருகிறது. நடிகர் அஜித்தின் கெரியரில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் குட் பேட் அக்லி படைத்துள்ளது. தமிழ்நாட்டிலும் அதிக வசூல் செய்த அஜித் படம் என்கிற பெருமையை குட் பேட் அக்லி பெற்றுள்ளது.
இப்படி சாதனை மேல் சாதனை படைக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் தற்போது சர்ச்சையிலும் சிக்கி உள்ளது. அதன்படி குட் பேட் அக்லி பட இயக்குனர் மீது தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலசங்கத்தினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் லிங்கப் பெருமாள் அளித்துள்ள புகாரில், “அஜித்குமார் நடித்துள்ள "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் தாஸ் இளம்பெண்களுடன் நடனமாடும் பாடல் காட்சிகளை அருவறுக்கத்தக்க வகையில் படமாக்கியுள்ளனர்.
பெண்களை மிக இழிவாகவும், அரைகுறை ஆடையுடனும் நடனம் ஆட வைத்துள்ள இயக்குநர், பெண்களின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் சிதைக்கும் வகையில் ஒரு பிம்பத்தை உருவாக்கி உள்ளார். சிறிதளவு கூட சமூக அக்கறை இல்லாமல் இப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதோடு பெண்களை இழிவுப்படுத்தி காட்டப்பட்டுள்ள காட்சிகளை படத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.