பஹல்காம் தாக்குதல் எதிரொலி; அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது - மத்திய அரசு

24 சித்திரை 2025 வியாழன் 18:17 | பார்வைகள் : 102
காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அட்டாரி-வாகா எல்லையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சார்க் விசா ஒப்பந்தத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு வர அனுமதி இல்லை. SVES விசா மூலம் தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.
பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது. பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும். பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1-ந்தேதிக்குள் இந்தியவில் இருந்து வெளியேற வேண்டும்.
பாதுகாப்புப்படை, விமானப்படை, கடற்படை ஆலோசகர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து அழைக்க்பப்படுவார்கள். பாகிஸ்தானுக்கான தூதரக உதவிகளை குறைக்கவும், சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.