Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா..! சிக்கலில் ஜெலென்ஸ்கி

உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா..! சிக்கலில் ஜெலென்ஸ்கி

24 சித்திரை 2025 வியாழன் 07:47 | பார்வைகள் : 181


கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா போர் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, லண்டனில் நடைபெற்ற அமெரிக்கா உக்ரைன் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் தொடர்பான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன.

எனினும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அங்கீகரிக்கும் அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் பிடிவாதமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முன்மொழிவின்படி, கிரிமியா ரஷ்யாவின் பிரதேசம் என்றும், மேலும் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், சபோரோஷியே மற்றும் கெர்சன் மீதான ரஷ்யாவின் கட்டுப்பாட்டை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ரஷ்யாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பிரதேசங்களை எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்தது உக்ரைன் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வெளியிட்டுள்ள கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த உக்ரைன் துணைப் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ, உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தாலும், நாட்டை சரணடையச் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும், "சமாதானம் என்ற போர்வையில் ஒரு முடக்கப்பட்ட மோதலை எங்கள் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்