பிரான்சிலேயே அதிகம் விற்கப்பட்ட பத்திரிகை எது?
30 ஆவணி 2016 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 19342
தலைப்பில் உள்ள கேள்விக்கான பதிலை இணையத்தில் தேடினோம்... "Ouest-France" இந்த பத்திரிகை தான் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பத்திரிகை என பதில் கிடைத்தது. இப்பத்திரிகை தொடர்பாக மேலும் சில 'ராபிட் ஃபயர்' தகவல்கள்!!
1944 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பத்திரிகை, பிரான்சின் 'லார்ஜஸ்ட்' பத்திரிகை என பெயர் பெற்றது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. உள்ளூர் வெளியூர் வெளிநாடு என இப்பத்திரிகையில் அத்தனை செய்திகளையும் பிரசுரித்தனர். அதே ஆண்டில் மற்றுமொரு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. அதுதான் Le Parisien.
விதம் விதமாக 47 'எடிஷன்' வெளியிட்டது இப்பத்திரிகை. 12 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து 47 பிரசுரங்களை பதிப்பித்தது. உள்ளூர் செய்திகள் எல்லாம் வெளியிட... விற்பனை அமோகமாக கொடி கட்டி பறந்தது.
தினமும் 2.5 மில்லியன் வாசகர்கள் பத்திரிகையை வாசித்தார்கள். அத்தோடு அதிகபட்சமாக 2001 ஆம் ஆண்டின் ஒரு நாளில் 773,471 (கிட்டத்தட்ட எட்டு லட்சம்) பிரதிகள் விற்பனையாகி சர்குலேஷன் எல்லைக்கோடுகளை தகர்த்தது. சர்குலேஷன் குறித்து வைக்கும் பலகையில் இடம் தாண்டி... சிவற்றில் கோடு போட்டு வைத்தார்களாம்.
அதற்கு அடுத்த வருடம் 2002இல், 764,731 பிரதிகள் விற்றது. அதற்கு பின் அப்பதிரிகையோ... வேறு பத்திரிகையோ... அந்த சர்குலேஷனுக்கு கிட்டவும் நெருங்கவில்லை!!
ஆரம்பத்தில் புத்தக விற்பன்னராக இருந்த Adolphe Le Goaziou என்பவர், தன் சகாக்களோடு ஆரம்பித்த பத்திரிகை தான் Ouest-France. விற்பனையின் உச்சம் பெற்று பிரெஞ்சு பத்திரிகை பெல்ஜியம், பிரித்தானியா என எல்லைக்கோடுகளை கடந்து விற்பனையாகியது.