செந்தில் பாலாஜிக்கு அடிமேல் அடி : ராஜினாமா செய்ய கெடு

25 சித்திரை 2025 வெள்ளி 11:55 | பார்வைகள் : 102
அமைச்சர் பதவியில் நீடிக்கும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய, சுப்ரீம் கோர்ட் நான்கு நாள் கெடு விதித்துள்ளது. அதேநேரத்தில், டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய, ரெய்டு சரியானதே என, சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக நிறைய பேரிடம் லஞ்சம் பெற்றதாக புகார்கள் வந்தன. வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, தற்போதைய தி.மு.க., அரசில் அமைச்சராக இருந்த செந்திலை, 2023 ஜூனில் கைது செய்தது.
சென்னை ஐகோர்ட் ஜாமின் மறுத்ததால், சுப்ரீம் கோர்ட் போனார் செந்தில் பாலாஜி. அப்போது, அவர் அமைச்சராக இல்லை என்பதால், சாட்சிகளை கலைக்க மாட்டார் என்ற உத்தரவாதத்தை ஏற்று, செப்., 26ல், சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. ஆனால், அடுத்த நாளே அவர் அமைச்சராக பதவியேற்றார்.
அதை எதிர்த்து, வித்யா குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். 'செந்தில் மீண்டும் அமைச்சராகி விட்டதால், அவரின் ஆதிக்கம் வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரினார். அமலாக்கத் துறையும், அதே கோரிக்கையுடன் மனுத்தாக்கல் செய்தது.
மனுக்களை நீதிபதி அபயா எஸ் ஓகா தலைமையிலான அமர்வு விசாரித்தது. முந்தைய விசாரணையில், 'செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா அல்லது அவருக்கு எதிரான இந்த வழக்கை நாங்கள் விரைவாக விசாரிக்கட்டுமா?' என்று நீதிபதிகள் கேட்டிருந்தனர்.
அதற்கு செந்தில் பாலாஜி, 'நான் அமைச்சராக தொடரக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் கூறவில்லை. நிபந்தனை விதித்தால், பின்பற்ற தயாராக இருக்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறியதாவது:
ஏற்கனவே மூன்று முறை உங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வாய்ப்பு வழங்கினோம். நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உங்களது கடந்த கால செயல்பாடுகள், நீங்கள் இந்த வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட்டதை நிரூபிக்கின்றன. மேலும், இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கேட்கிறீர்கள்; அது சாத்தியம் இல்லை. ஏனென்றால், ஆயிரக்கணக்கான சாட்சிகள் உள்ளனர். உங்களுக்கு ஜாமின் வழங்கியது, சிறையில் நீங்கள் காட்டிய நன்னடத்தையால் அல்ல. அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது என்ற காரணம் தான். ஆனால், எங்கள் தாராளத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர். உடன், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், 'அமைச்சராக பதவி ஏற்க மாட்டேன் என, செந்தில் பாலாஜி சொல்லவே இல்லை' என்றார்.
இதனால் கோபமான நீதிபதிகள், 'அப்படி என்றால், உங்களுக்கு ஜாமினே வழங்கி இருக்கக்கூடாது. அது நாங்கள் செய்த தவறு தான். நீங்கள் அமைச்சராக இருந்த போது, புகார்தாரர்களுடன் உடன்பாடு செய்து கொண்டதை ஐகோர்ட் சுட்டிக்காட்டி இருந்தது. சாட்சிகளை கலைக்க முயன்றதையும் சுட்டிக் காட்டியது. அதையெல்லாம் மீறி ஜாமின் தந்தது எங்கள் தவறு தான்' என்றனர்.
'சாட்சி அளிக்க எவரும் வரவில்லை என்றால், அமைச்சர் என்ன செய்வார்?' என, அவரது தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் மீண்டும் கேட்டார். கடுப்பான நீதிபதிகள், 'எந்த சாட்சியும் கூண்டுக்கு வர முடியாமல் அமைச்சர் தடுக்கிறார் என்பது தான் அர்த்தம்' என்றனர்.
'மனி லாண்டரிங் வழக்கில் ஜாமின் கிடைப்பது ரொம்ப கடினம். அதை மீறி ஜாமின் வழங்கியது தவறு என்பதை இப்போது உணர்கிறோம். உங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது சுதந்திரம் வேண்டுமா என்பதை, 28ம் தேதிக்குள் சொல்லுங்கள்' என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
டாஸ்மாக்கில் ரெய்டு நடத்தியது சரிதான் அரசு மனு தள்ளுபடி
சென்னை :'டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள், ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி, அமலாக்க துறை விசாரணையை தடுக்க முயற்சிப்பது துரதிருஷ்டமானது' என, ஐகோர்ட் தெரிவித்து
உள்ளது.'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், மார்ச் 6 முதல் 8 வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதி பெறாமல் நடத்திய இந்த சோதனை செல்லாது என அறிவிக்க கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
ஏற்க முடியாது
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் விசாரித்தனர். நேற்று அவர்கள் பிறப்பித்த தீர்ப்பு: சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றம் என்பது, நாட்டு மக்களுக்கு எதிரானது. நாட்டின் நலன் கருதியே சோதனை நடத்தப்பட்டு உள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, 2017 முதல் 2024 வரை பதிவு செய்யப்பட்ட, 41 முதல் தகவல் அறிக்கைகள் அடிப்படையில் தான், அமலாக்க துறை சோதனை நடத்தியுள்ளது. அதற்கு சட்டத்தில்
இடமிருக்கிறது. எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்துகிறோம் என்பதை, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தெரிவிக்க அவசியம் இல்லை.அப்படி செய்தால், ஆதாரங்களை மறைக்கவும், அழிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. அதிகாரிகளிடம் கட்டாயப்படுத்தி, கையெழுத்து வாங்கியதாக அரசு சொல்வதை ஏற்க முடியாது.
அரசு ஊழியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்; அது அவர்களின் கடமை. டாஸ்மாக் அதிகாரிகள் யாரும், இதுகுறித்து புகார் சொல்லவில்லை. அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டதாக, அரசு தான் சொல்கிறது. சோதனை சட்டப்பூர்வமாக நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள், அமலாக்க துறையால் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அஸ்திவாரம் பாதிக்கும்
உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்தால், அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்யலாம். அரசும், டாஸ்மாக் நிர்வாகமும், இந்த வழக்கை ஏன் தாக்கல் செய்தன என்று புரியவில்லை. டாஸ்மாக் நிறுவன பெண் அதிகாரிகள், ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி, அமலாக்க துறை விசாரணையை தடுக்க அரசே முயற்சிப்பது துரதிருஷ்டமானது.டாஸ்மாக் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அதுகுறித்து, முழு விசாரணை நடத்த வேண்டும். ஆரம்ப கட்ட நடவடிக்கையான சோதனையை எதிர்ப்பது, நீதி பரிபாலனத்தின் அஸ்திவாரத்தை பாதிக்கும்.
சோதனைக்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. கூட்டாட்சி தத்துவம், இந்த வழக்குக்கு பொருந்தாது. தேசத்திற்கு எதிரான குற்றம் குறித்த விசாரணையை தடுக்க, அந்த தத்துவத்தை பயன்படுத்த கூடாது.
அபத்தமான வாதம்
அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனை நடத்த, அரசிடமே அனுமதி பெற வேண்டும் என்பது அபத்தமான வாதம். இது, குற்றவியல் நீதி அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரானது.எனவே, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அமலாக்க துறை தொடர்ந்து விசாரணை நடத்தலாம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். செந்தில் பாலாஜிக்காக வழக்கு தொடர்ந்த தமிழக அரசுக்கு இது முக்கியமான பின்னடைவு என, சட்ட நிபுணர்கள் கூறினர்.