மூன்று அடுக்கு பாலம்! - பிரான்சின் அடையாளம்!
25 ஆவணி 2016 வியாழன் 13:10 | பார்வைகள் : 19539
யுனெஸ்கோ அடையாளப்படுத்தியிருக்கும் பாரம்பரிய அடையாளச்சின்னங்கள் பட்டியலில் பிரான்சில் உள்ள பல இடங்கள் உண்டு. அதில் ஒன்று தான் இந்த Pont du Gard எனும் மூன்று அடுக்கு பாலம். 'ஆற்றை கடக்க ஒரு பாலம் அமைப்போம்!' என சாதாரணமாக இல்லாமல், அதை கலையம்சத்துடன்... பிரான்சின் அடையாளங்களில் ஒன்றாக மாற்றியிருப்பது அசத்தல் 'ஐடியா' தானே! இதோ மேலும் சில தகவல்கள்...
Gardon நதியை Gard மாவட்டத்தின் Vers-Pont-du-Gard பகுதியில் வைத்து கடக்கிறீர்கள் என்றால்... நீங்கள் இந்த பாலத்தின் மேல் இருக்கிறீர்கள் என அர்த்தம். இட்லி தட்டு போல் மூன்று அடுக்காக கட்டப்பட்டிருக்கும் இவ் மேம்பாலத்தில், முதலாவது (கீழிருந்து) பாலம் 142 மீட்டர்கள் நீளத்தையும் 22 மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளது.
அதற்கு மேல் உள்ள இரண்டாம் பாலம் 242 மீட்டர் நீளத்தையும் 20 மீட்டர் உயரத்தையும் (முதலாவது பாலத்தில் இருந்து) கொண்டுள்ளது. இது இரண்டுக்கும் மேலே உள்ள மூன்றாவது பாலம் 275 மீட்டர் நீளமும் 7 மீட்டர் உயரமும் (இரண்டாவது பாலத்தில் இருந்து) கொண்டுள்ளது.
ஆரம்பத்தில் இது ஒற்றைப்பாலமாக தான் இருந்தது... பின்னர் ஆறு பெருக்கெடுக்க.. பாலத்தை மூடிச்சென்றுள்ளது. அதன் பின்னர் தான் மேலே இரண்டு பாலங்களை கட்டியுள்ளனர் என்கிறது விக்கிப்பீடியா.
முதலாம் நூற்றாண்டில் கட்டி முடித்து... ஆறாம் நூற்றாண்டில் இழுத்து மூடிவிட்டிருக்கும் இப்பாலத்தை... நீங்கள் இப்போது 'ஜஸ்ட்' பார்வையிட மட்டும் தான் முடியும் என்பது ஒரு 'வட போச்சே!' மூமெண்ட்!!