பயங்கரவாத தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் வாக்குமூலம்

26 சித்திரை 2025 சனி 16:49 | பார்வைகள் : 299
கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளுக்காக பயங்கரவாதிகளுக்கு நிதி மற்றும் பயிற்சி அளித்தோம். அந்த மோசமான செயலுக்கான தண்டனையை ரொம்பவே அனுபவித்து விட்டோம்' என பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின், 'ஸ்கை நியூஸ்' சேனலுக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா ஆசிப் இதை வாக்குமூலம் போன்று விவரித்தார்.
எனினும், இதற்கு முன் நடந்ததை போலவே, பஹல்காமில் நடந்த தாக்குதலும், சுய லாபத்துக்காக மோடி அரசால் நிகழ்த்தப்பட்டு அல்லது அனுமதிக்கப்பட்டு உள்ளது என்று அவர் அபாண்டமாக குற்றம் சாட்டினார்.
ஊர்ஜிதம்
பஹல்காமில் 26 சுற்றுலா பயணியர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்; இது, 2008 மும்பை தாக்குதலுக்கு பின் நடந்த மோசமான தாக்குதல்.
வழக்கம் போல, நம் அண்டை நாடான பாகிஸ்தான் அரசு தான் இதற்கும் காரணம் என, பரவலாக நம்பப்பட்டது.
மத்திய அரசும் உளவு தகவல்கள் வாயிலாக அதை ஊர்ஜிதம் செய்தது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - இ - தொய்பாவின் கிளையான, 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக, இந்திய உளவுத்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
அந்த அமைப்பும் இதை பெருமையுடன் ஊர்ஜிதம் செய்தது. அவர்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதமும், பயிற்சியும் வழங்கியது என்பதும் அம்பலமானது.
ஆனால், ஸ்கை நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்த பாக்., ராணுவ அமைச்சர், 'இதெல்லாம் இந்தியா சொல்லும் தகவல்; நான் இந்த பெயரையே கேள்விப்பட்டது இல்லை' என்றார்.
அதோடு நிற்கவில்லை. 'லஷ்கர் - இ - தொய்பா அமைப்பின் கதையே முடிந்த விஷயம். தாய் அமைப்பே இல்லாத போது, அதன் கிளையாக ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் எப்படி இயங்க முடியும்?' என்று கேட்டார்.
உலகறிந்த ரகசியம்
எனினும், பேட்டி எடுத்த பெண்மணி யால்டா ஹக்கீம் விடவில்லை. ஒசாமா பின்லேடன் யார் என்றே தெரியாது என்று சொன்ன பாகிஸ்தான் அரசையும், பாகிஸ்தானில் அரசு ஆதரவுடன் பதுங்கி இருந்த பின்லேடனை அமெரிக்க ராணுவம் கண்டுபிடித்து தாக்கி கொன்றதையும் பார்த்த பிறகு, அந்த அரசின் பேச்சை உலகம் நம்புவதில்லை என்பதை நாசூக்காக சுட்டிக் காட்டினார்.
அதன் பிறகு தான் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் மனம் திறந்தார். 'உண்மையில் பாகிஸ்தான் தான், பயங்கரவாத அமைப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு' என அவர் புலம்பினார்.
கடந்த 1980களில் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியன் படைகளை துரத்துவதற்காக தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கியதில் பாகிஸ்தானின் பங்களிப்பு கணிசமானது.
அவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் கணிசமான நிதியும், ஆயுதங்களும் வழங்கியது வரலாறு. அதில் பெரும் பங்கை பாகிஸ்தான் ராணுவம் சுட்டதும் உலகறிந்த ரகசியம்.
யால்டா அந்த நினைவுகளை எல்லாம் கிளறி விட்டதால் தளர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அமைச்சர், மறுக்க மனம் வராமல் ஒப்புக் கொண்டார்.
30 ஆண்டுகள்
'ஆமாம், நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான். இன்று பயங்கரவாதி என அழைக்கப்படும் அவர்கள் எல்லாம் அன்று சோவியத் படைகளை எதிர்த்து போராடும் விடுதலை போராளிகளாக மதிக்கப்பட்டனர்.
'அவர்களின் தளபதிகள், அமெரிக்காவில் செல்வாக்குடன் வலம் வந்தனர். 30 ஆண்டுகளாக பாகிஸ்தானில் அந்த பயங்கரவாதிகளுக்கு நிதியும், பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கியது உண்மை தான்.
'அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளுக்காக அதை நாங்கள் செய்தோம்; அதற்கான பலனை அனுபவித்தோம்' என்றார்.
'பயங்கரவாதிகள் என்றாலே கூலிப்படை தான்'
பயங்கரவாதிகள் எப்போதும் எந்த நாட்டுக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். யார் பணமும் ஆயுதமும் தருகின்றனரோ, அவர்கள் சொல்வதை கேட்பர் என்பதை பாக்., அமைச்சர் கோடிட்டு காட்டினார். 'அவர்களுக்கு நீங்கள் வெவ்வேறு பெயர் சூட்டலாம். ஆனால், எல்லாரும் ஒன்றுதான். யாரை தாக்க சொல்கிறோமோ, அவர்களை தாக்குவர். அந்த சந்தர்ப்பம் வராதபோது, அவர்களுக்குள்ளேயே மோதிக் கொள்வர்' என்றார்.
பாக்., ராணுவமும், அதன் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.,யும், இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை நடத்த, அதே பயங்கரவாதிகளை பயன்படுத்திக் கொண்டனர் என்பதை, பாக்., ராணுவ அமைச்சர் சுற்றி வளைத்து இந்த பேட்டியில் ஒப்புக் கொண்டுள்ளார். ராணுவ அமைச்சர் பதவியில் இருப்பவர் இந்த உண்மையை ஒப்புக் கொண்டது இதுவே முதல் தடவை.
இதனால், அமைச்சர் தன் பதவியை அல்லது உயிரை இழந்தால் கூட ஆச்சரியம் இல்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 'இந்தியா எங்கள் மீது போர் தொடுத்தால், நாங்களும் பதிலடி கொடுப்போம்' என்ற சம்பிரதாயமான கோஷத்துடன், அமைச்சர் பேட்டியை முடித்துக் கொண்டார்.