ஐ.நா ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டம்

29 சித்திரை 2025 செவ்வாய் 14:57 | பார்வைகள் : 198
மற்றவர்களை பாதுகாக்க உழைக்கும் தங்கள் வேலைக்கே பாதுகாப்பில்லை எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஐ.நா ஊழியர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
உலக சுகாதார அமைப்பு தனது பணியாளர்களில் 35 சதவிகிதம்பேரை பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பணியாளர்களுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்திவிட்டது.
அமெரிக்காவைத் தொடர்ந்து பல நாடுகள் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்திவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, உலக சுகாதார அமைப்பு, ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது. அந்த அமைப்பில் 2,400 பேர் பணியாற்றும் நிலையில், 800க்கும் அதிகமானோர் பணி இழப்பார்கள் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ஆட்குறைப்பு, பட்ஜெட் வெட்டு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சர்வதேச தொழிலாளர் தினமான மே மாதம் 1ஆம் திகதி, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட ஐ.நா ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
உலகத்தில் எளிதில் ஆபத்துக்குள்ளாகும் நிலையிலிருப்போரை பாதுகாக்க நாங்கள் உழைக்கிறோம். ஆனால், எங்கள் வேலைக்கே பாதுகாப்பில்லை என்கிறார்கள், ஐ.நா ஊழியர்கள்.