பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை: 4000 போலீசார் பாதுகாப்பு

5 சித்திரை 2125 வியாழன் 18:33 | பார்வைகள் : 271
புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை(ஏப்.,6) ராமேஸ்வரம், பாம்பன் வருகிறார். மதியம் 12:00 முதல் 2:30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பாதுகாப்பு பணியில் 4000 போலீசார் ஈடுபடுகின்றனர்.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைத்து புதிய ரயில் போக்குவரத்தையும் துவக்குகிறார். இதற்காக இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் நாளை காலை 11:50 மணிக்கு வந்திறங்குகிறார்.
பின், அங்கிருந்து காரில் புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைத்துள்ள மேடைக்கு சென்று புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
ராமேஸ்வரம் - தாம்பரம் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். பின் காரில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்கிறார். ராமநவமியான நாளை ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்கிறார்
பின் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தமிழ்நாடு அரசு தங்கும் விடுதி வளாகத்தில் நடக்கும் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகிறார். நிகழ்ச்சிகள் மதியம் 2:30 மணிக்கு முடிந்ததும் மண்டபத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு 4000 போலீசார் ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது;
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் எதிர்வரும் 6.4.2025 அன்று வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். தன் பின் வழக்கம் போல் ஆறுகால பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் பிரதமர் வருகை தர இருப்பதால் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோவிலுக்குள் தரிசனம் மற்றும் தீர்த்தம் நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பிற்பகல் 3.30 மணி முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் மற்றும் தீர்த்தம் நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.