ஹவுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்….! வெளியிட்ட டிரம்ப்

6 சித்திரை 2025 ஞாயிறு 05:19 | பார்வைகள் : 520
ஏமனின் ஹவுதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் வீடியோவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஏமனில் அமெரிக்க படைகள் நடத்திய ஹவுதி போராளிகள் மீதான தாக்குதல் வீடியோ ஒன்றை தனது ட்ரூத் சமூக வலைத்தளம் மூலம் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
செங்கடல் கப்பல் போக்குவரத்து பாதையில், காசா இஸ்ரேல் போர் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து, ஹவுதி படைகள் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான வீடியோவில், குழுவாக நின்றிருந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கப் படைகள் துல்லியமான தாக்குதல் நடத்தி அவர்களை அழிப்பது பதிவாகியுள்ளது.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஹவுதி ராணுவத்தினர் என்றும், அவர்கள் ஒரு முக்கியமான கட்டளைக்காக கூட்டமாக காத்திருந்ததாகவும் டிரம்ப் தனது பதிவில் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த தாக்குதல் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் காரணமாக, ஒரு தரப்பினர் டிரம்ப் மீது போர்க் குற்றம் புரிந்ததாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.