சீன பொருட்கள் குவிப்பு மீதான கண்காணிப்பை கடுமையாக்குகிறது இந்தியா

7 சித்திரை 2025 திங்கள் 10:01 | பார்வைகள் : 251
முக்கிய வர்த்தக கூட்டு நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரிகளின் எதிரொலியால், சீனப் பொருட்களின் இறக்குமதி மீது மத்திய அரசு கண்காணிப்பை கடுமையாக்குகிறது. இது தொடர்பான உத்தியை வகுக்க வர்த்தக செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
சமீபத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய பரஸ்பர வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார். இது பல நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் மதிப்பு வரிகளை விதித்தது. 34 சதவீதம் என்ற அதிக வரி விதிப்பால், சீனா கடுமையாக பாதிப்புஅடைந்துள்ளது.
இது அமெரிக்காவுக்கான சீன இறக்குமதிகள் மீது ஏற்கனவே உள்ள 20 சதவீதத்துடன் இணைந்து, மொத்த வரி 54 சதவீதமாக உயர்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால், சீனா தன் ஏற்றுமதிகளை வேறு நாடுகளுக்கு திருப்பி விடக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளதுடன், குறிப்பாக இது இந்தியாவில் பொருள் குவிப்புக்கு வழி வகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, டி.ஜி.டி.ஆர்., எனப்படும் வர்த்தக தீர்வுகள் இயக்குனரகம் சார்பில், சீன பொருள் குவிப்பை தடுக்க வலுவான தடுப்பு முறை இருப்பதை உறுதி செய்ய வர்த்தகத்துறை முயன்று வருகிறது. மேலும், பொருள் குவிப்பை தடுப்பதற்கு தேவையான உத்திகளை வகுக்க வர்த்தக செயலர் தலைமையில் ஆலோசனைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
வர்த்தக துறையின் தரவுகளின்படி, 2024 - 25ம் நிதியாண்டின் ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் சீனாவில் இருந்து இந்தியா, 8.92 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 10.40 சதவீதம் அதிகமாகும். இதற்கு நேர்மாறாக, சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 15.70 சதவீதம் குறைந்து 1.09 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
ஆண்டு இறக்குமதி மதிப்பு (ரூபாய் லட்சம் கோடியில்)
2020 - 21 5.61
2021 - 22 8.13
2022 - 23 8.47
2023 - 24 8.75
2024 - 25 8.92