இனி CSK குறித்து பேச மாட்டேன் - அஸ்வினின் அறிவிப்புக்கு காரணம் என்ன?

7 சித்திரை 2025 திங்கள் 08:54 | பார்வைகள் : 216
5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, 2025 ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் 3 தோல்வியை சந்தித்து, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இதனால் சென்னை அணி ரசிகர்களிடமிருந்து கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சென்னை அணியில் விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த சேனலில், The Small Council என்ற பெயரில் ஐபிஎல் போட்டிகளை அலசி ஆராயும் விவாத நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால், அஸ்வின் இதன் முதல் வீடியோவில் மட்டும் கலந்து கொண்டார்.
தற்போது, கிரிக்கெட் அனலிஸ்ட் பீடாக் மற்றும் இந்திய முன்னாள் வீரர் வித்யூத் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த விவாத நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய பீடாக், "சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கும் போது நூர் அகமதுவை சென்னை அணி வாங்கியிருக்க தேவை இல்லை" என கூறினார்.
அடுத்து பேசிய வித்யூத் சிவராமகிருஷ்ணன், "சென்னைஅணியின் திறமை அடையாளம் காணும் குழுவில் தான் இருந்ததாகவும், தான் பரிந்துரை செய்த அனிகேத் வர்மா, வதேரா போன்ற இளம் வீரர்களை சென்னை அணி ஏலத்தில் வாங்கவில்லை என்றும் கூறி இருந்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் 10 விக்கெட்களை வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் நூர் அகமது முதலிடத்தில் இருக்கும் நிலையில், அஸ்வினின் யூடியூப் சேனலில் பேசிய இந்த பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெமிங்கிடம் கேட்ட போது, எனக்கு அந்த விஷயம் குறித்து எதுவும் தெரியாது. அணியின் விஷயங்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாத ஒன்றாகும்" என தெரிவித்தார்.
ரசிகர்களிடையே இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி CSK தொடர்பான போட்டிகள் குறித்து எதுவும் பேசப்போவதில்லை என அஸ்வின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அஸ்வின் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த வாரம் இந்த மன்றத்தில் (ஃபோரம்) நடந்த விவாதங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, விஷயங்கள் எவ்வாறு தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்பதில் நாங்கள் கவனமாக இருக்க விரும்புகிறோம்.
இதன் காரணமாக, இந்தப் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள சிஎஸ்கே போட்டிகள் குறித்த முன்னோட்டங்கள் மற்றும் விமர்சனங்கள் ஆகிய இரண்டையும் வழங்குவதிலிருந்து விலகிக்கொள்ள முடிவு செய்துள்ளோம்." என தெரிவித்துள்ளார்.