அமெரிக்காவின் அதிர்ச்சி வைத்தியம் - இலங்கை எப்படி சமாளிக்கப் போகிறது

7 சித்திரை 2025 திங்கள் 09:50 | பார்வைகள் : 127
இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படுகின்ற ஏற்றுமதிகளுக்கு 44 வீத தீர்வை வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
இம்மாதம் 05ஆம் திகதி முதல் இந்த தீர்வை வரி அமுலுக்கு வருகிறது. அந்த வகையில் இலங்கை கிட்டத்தட்ட 3000 மில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவுக்கு ஆடை துறை உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அவற்றுக்கு 44 வீத தீர்வை வரி விதிக்கப்படவிருக்கிறது.
முழு உலக நாடுகளுக்கும் அமெரிக்கா இவ்வாறு தீர்வை வரிகளை அறிவித்திருக்கிறது. அதன்படி இலங்கைக்கும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது இலங்கைக்கு பொருளாதார ரீதியில் மிகப் பெரிய அதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது. இலங்கை இதனை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதிலேயே அடுத்தகட்ட நகர்வுகள் தங்கியிருக்கின்றன. இந்தத் தீர்வை விதிப்பினால் இலங்கை மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் நிபுணர்களினால் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு இதனால் ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்பதாக இந்த தீர்வை வரி ஏன் விதிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் காலத்தில் அமெரிக்காவுக்கு செய்யப்படுகின்ற இறக்குமதிகளுக்கு விதிக்கப்படுகின்ற தீர்வைகளை அதிகரிக்கப் போவதாக அறிவித்திருந்தார். குறிப்பாக சீனா, கனடா, மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்றவற்றுக்கு இந்தத் தீர்வைகள் விதிக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார். அதில் இலங்கையின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனாலும் இலங்கையின் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, தனநாத் பெர்னாண்டோ உள்ளிட்ட பொருளாதார நிபுணர்கள் இந்த தீர்வை விதிப்பினால் இலங்கை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்று அறிவித்திருந்தனர்.
இதன் அபாயங்களை மதிப்பீடு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வீரகேசரி பத்திரிகை சார்பாக நாமும் வலியுறுத்தியிருந்தோம். இந்தப் பின்னணியில் தற்போது அமெரிக்க ஜனாதிபதி இலங்கைக்கு 44 வீத தீர்வை வரியை விதித்திருக்கிறார். அதாவது, இலங்கை வருடமொன்றுக்கு 12 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருமானத்தை பெறுகிறது.
அதில் அமெரிக்காவுக்கும் மட்டும் இலங்கை கிட்டத்தட்ட 3000 மில்லியன் அதாவது 3 பில்லியன் டொலர்களுக்கு ஏற்றுமதி செய்கிறது. இது இலங்கை ஏற்றுமதி வருமானத்தின் கிட்டத்தட்ட 25 வீதமாகும். இதற்கு 12.2 வீதம் இதுவரை அறவிடப்பட்டது.
ஆனால், இலங்கை அமெரிக்காவிடமிருந்து சுமார் 300 மில்லியன் அளவுக்கே இறக்குமதி செய்கிறது. இதற்கு இலங்கை கிட்டத்தட்ட 88 வீதமான தீர்வைகளை விதிக்கிறது. மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இலங்கைக்கு அதிக இலாபம் கிடைக்கிறது. இந்நிலையில் இலங்கை விதிக்கின்ற 88 வீதத்தில் அரைவாசியான 44 வீதத்தை இலங்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி தீர்வையாக விதித்திருக்கிறார்.
அதாவது இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செலவை குறைக்கும் நோக்கிலேயே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இதேபோன்று ஏனைய நாடுகளுக்கும் தீர்வை வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவுக்கு 34 வீதம், வியட்நாமுக்கு 46 வீதம், இந்தியாவுக்கு 26 வீதம், ஜப்பானுக்கு 24 வீதம், கம்போடியாவுக்கு 49 வீதம், பங்களாதேஷ் 37 வீதம் என பல்வேறு நாடுகளுக்கும் அந்த நாடுகள் அமெரிக்காவுக்கு விதிக்கும் தீர்வைகளின் பிரகாரம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வித்தியாசத்துக்கு ஏற்றவகையில் அமெரிக்கா தீர்வைகளை விதித்திருக்கிறது.
இந்நிலையில் இலங்கையின் இறக்குமதிகளுக்கு 44 வீத தீர்வையை அமெரிக்கா விதித்துள்ளதால் இலங்கையிலிருந்து ஆடை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்கின்றவர்கள் அடுத்து எவ்வாறான முடிவை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாகும்.
இது தொடர்பில் கருத்து வெளியிடும் மூத்த பொருளாதார ஊடகவியலாளர் அசந்த சிறிமான்ன, ‘‘இந்த வரி விதிப்பினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் பாதிக்கப்படலாம். இலங்கையை விட குறைவான வரி விதிக்கப்பட்டுள்ள நாடுகளிடம் அமெரிக்க வர்த்தகர்கள் இறக்குமதி செய்யலாம். குறிப்பாக பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கு இலங்கையை விட குறைவான வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்க வர்த்தகர்கள் அந்த நாடுகளை நாடலாம். இது இலங்கையின் ஆடைத் துறையை பாதிக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை அமெரிக்காவுக்கு 3000 மில்லியனுக்கு செய்கின்ற ஏற்றுமதியில் ஆடைத் துறை உற்பத்திகளே அதிகளவில் காணப்படுகிறது. அத்துடன் இறப்பர், தேயிலை உள்ளிட்ட 80 வகையான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், ஆடை உற்பத்திகளே அதிகம் ஏற்றுமதி செய்கின்றன.
இது குறித்து தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘’ இலங்கையை மாத்திரம் இலக்காகக் கொண்டு அமெரிக்கா தீர்வை வரியை விதிக்கவில்லை. அமெரிக்காவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் சகல நாடுகளுக்கும் இந்த தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது.பொதுவான கொள்கை அடிப்படையில் அமெரிக்கா இந்த வரி விதிப்பை அமுல்படுத்தியுள்ளது. அமெரிக்கா வர்த்தக பற்றாக்குறையை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.
ஏப்ரல் 9 ஆம் திகதிக்கு பின்னர் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வை வரி வீதத்தை குறைத்துக் கொள்வது தொடர்பில் கோரிக்கை முன்வைக்க முயற்சித்துள்ளோம்’’ என்று அனில் ஜயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டிருக்கிறார்.
இது இவ்வாறிருக்க அமெரிக்கா இலங்கையிலிருந்தான இறக்குமதிக்கு வரி விதித்துள்ளதால் அந்நாட்டுக்குள் குறித்த பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம். அதாவது, அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்ற இலங்கையின் ஆடை உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்கலாம். இது அமெரிக்க மக்களின் கொள்வனவு சக்தியை பாதிக்கும். அத்துடன் பணவீக்கம் அதிகரிக்கலாம். ஆனாலும் கூட ஏற்றுமதி வருமானத்தைப் பெறுகின்ற இலங்கைக்கே அதிக பாதிப்பு ஏற்படும்.
அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள தீர்வை வரி காரணமாக இலங்கையின் ஆடைத் துறை ஆபத்தில் விழக்கூடும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபர துறையைச் சேர்ந்த பேராசிரியர் வசந்த அத்துகோரள எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அமெரிக்கா விதித்துள்ள வரி அளவுகளை பார்க்கும் போது இலங்கை 06ஆவது மிக உயர்ந்த வரி விதிப்புக்கு உட்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 12.2 வீத வரியை விதித்தது. தற்போது 44 வீத வரி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது எப்படி இலங்கை ஆடைத் துறையை பாதிக்கும் என்று பார்க்க வேண்டும். இலங்கையில் பல ஆடை கைத்தொழில் நிறுவனங்கள் காணப்படுகின்றன. பெரியளவிலான நிறுவனங்கள், சிறியளவிலான நிறுவனங்கள் என ஆடைக் கைத்தொழில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்நிலையில் இலங்கையிலிருந்தான அமெரிக்காவுக்கான ஏற்றுமதி குறையும் பட்சத்தில் அல்லது விலைகள் குறையும் பட்சத்தில் இலங்கையின் ஆடைத்துறை பாதிக்கப்படும். இலங்கையில் ஆடைத் துறை நிறுவனங்களில் ஊழியர்கள் குறைக்கப்படலாம்.
அதாவது தொழில் இழப்புகள் ஏற்படலாம். ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படலாம். அவர்களுக்கான வரப்பிரசாதம் குறையலாம். இவ்வாறு பல வழிகளில் இலங்கையின் ஆடைத் துறைக்கு பாதிப்பு ஏற்படும்.
இலங்கைக்கு வருடமொன்றுக்கு கிடைக்கின்ற 12 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தில் 5 பில்லியன் டொலர்கள் ஆடைமூலம் கிடைக்கிறது. எனவே, இந்த ஆடைத்துறை ஊடான ஏற்றுமதி வருமானம் பாதிக்கப்பட்டால் அது இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் தாக்கம் செலுத்தும். ஏற்கனவே இலங்கை பாரிய டொலர் பற்றாக்குறையில் இருக்கிறது. இன்னும் ஏற்றுமதி வருமானம் குறையும் பட்சத்தில் அது தாக்கம் செலுத்தும்.
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் வருடத்துக்கு 12 பில்லியன் டொலர்களாகவும் இறக்குமதி செலவு 22 பில்லியன் டொலர்களாகவும் இருக்கிறது. இதில் ஒவ்வொரு வருடமும் 10 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனை சுற்றுலா மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்கள் அனுப்புகின்ற டொலர்கள் மற்றும் கடன்கள் ஊடாகவே இலங்கை சமாளிக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்பினால் மேலும் ஏற்றுமதி வருமானம் குறைவடைந்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.
2022ஆம் ஆண்டு நெருக்கடியானது இவ்வாறு டொலர் பற்றாக்குறையினாலேயே ஏற்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது. எனவே, அரசாங்கம் அவசரமாக இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து மதிப்பீடு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
முதலாவது விடயமாக அமெரிக்கா வரி விதிப்பு தொடர்பில் ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்திருக்கிறார். திறைசேரி செயலாளர், மத்திய வங்கி ஆளுநர், முதலீட்டு சபை தலைவர், ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர், வெளிவிவகார அமைச்சின் பொருளாதார பிரிவுக்கான பணிப்பாளர் நாயகம் ஆகியோரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ உள்ளிட்ட வர்த்தகர்கள், பொருளாதார நிபுணர்களும் இந்தக் குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளனர்.
முழு உலக நாடுகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் தரும் வகையிலேயே அமெரிக்க ஜனாதிபதியின் இந்தத் தீர்வை வரி அறிவிப்பு காணப்படுகிறது. இந்த தீர்மானம் காரணமாக இலங்கையின் ஆடைத் துறை மட்டுமன்றி அதனூடான முழுப் பொருளாதார கட்டமைப்பும் ஆட்டம் காணலாம்.
குறிப்பாக, ஏற்கனவே இலங்கை வேலையின்மை அதிகரிப்பு, வறுமை அதிகரிப்பு என்பவற்றினால் சிக்கித் தவிர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த வரி விதிப்பினால் ஆடைத்துறை பாதிக்கப்பட்டு தொழில் இழப்புகள் ஏற்படுமாயின் அது நாட்டின் வேலையின்மைப் பிரச்சினையை தீவிரப்படுத்தும். வறுமையை அதிகரிக்கும்.
வரி விதிப்பு அதிகரித்தன் காரணமாக அமெரிக்க வர்த்தகர்கள் இறக்குமதியாளர்கள் இலங்கையிலிருந்தான இறக்குமதிகளை குறைத்தால் இலங்கைக்கு அது மிகப் பெரிய பொருளாதார அடியாக விழும்.
இலங்கையில் கிட்டத்தட்ட ஆடைக் கைத்தொழில் துறையில் 3 இலட்சம் பேர் நேரடியாக தொழில் செய்கின்றனர். அவர்களில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கி வாழ்கின்றனர்.
சிறியளவிலான ஆடைக் கைத்தொழில் நிறுவனங்களும் இலங்கையில் செயற்படுகின்றன. அந்த நிறுவனங்கள் இந்த பாதிப்பினால் ஒன்று தமது உற்பத்திகளை குறைக்க வேண்டி வரும்.
அல்லது நிறுவனங்களை மூட வேண்டிய அழுத்தம் கூட ஏற்படலாம். ஆனால், இலங்கை மட்டும் இந்த தீர்வை வரியை எதிர்கொள்ளவில்லை. மாறாக அதிகளவு ஏற்றுமதி செய்கின்ற மற்றுமொரு நாடான பங்களாதேஷுக்கு 37 வீதம் விதிக்கப்பட்டுள்ளது. (இலங்கையை விட குறைவு). வியட்நாமுக்கு 46 வீதம், இந்தியாவுக்கு 26 வீதம், கம்போடியாவுக்கு 49 வீதம் என தீர்வைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து நாடுகளும் பாரியளவில் பாதிப்பை சந்திக்கவுள்ளனர்.
எனினும், ஆடை உற்பத்தியில் ஈடுபடுகின்ற பெரும்பாலான நாடுகளுக்கும் வரி விதித்துள்ளதால் அமெரிக்க இறக்குமதியாளர்கள் எந்தவொரு நாட்டிடமும் இறக்குமதியே செய்யாமல் இருக்க முடியாது. அவர்களுக்கும் ஆடை உற்பத்திகளுக்கான தேவை இருக்கிறது. எனவே, வரி அதிகமாக இருந்தாலும் இறக்குமதி செய்தாக வேண்டும்.
ஆனால், பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளை விட இலங்கைக்கான வரி அதிகமாக இருப்பதால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இலங்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து படிப்படியாக மீண்டு வருகிறது. ஆடைக் கைத்தொழிலும் புத்தெழுச்சி பெற்று வருகிறது. இவ்வாறான பின்னணியில் இந்த வரி விதிப்பானது இலங்கைக்கு மிகப் பெரிய தாக்கமாக அமையும்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர் விஜயவர்தன இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 44 வீத தீர்வை வரியை விதித்துள்ளமையானது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தற்போதைய சூழலில் இலங்கை மீட்பாளராக இந்தியாவே செயற்பட முடியும். இலங்கை இந்தியாவுடன் எட்கா உள்ளிட்ட உடன்படிக்கைகளை விரைவில் செய்து கொண்டு வர்த்தக செயற்பாடுகளை விரிவுபடுத்துவது அவசியமாகும் என்று சுட்டிக்காட்டுகிறார்.
உடனடியாக என்ன செய்வது?
எனவே, இலங்கையின் ஆடைக் கைத்தொழில் உரிமையாளர்களின் கூட்டமைப்பு விரைந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதேபோன்று இலங்கையும் அமெரிக்காவுடன் விரைந்து இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை நோக்கி நகர வேண்டும். இவை குறுகியகால திட்டங்களாக இடம்பெறுவது கட்டாயமாகும். அதேபோன்று நீண்டகால திட்டங்களாக இலங்கையின் ஏற்றுமதியை விரிவுபடுத்துவது முக்கியமாகும்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக செயற்பாடுகள் அதிகரிக்கப்படவேண்டும். புதிய வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்வது அவசியமாகும்.
‘’ அமெரிக்காவின் வரி விதிப்பு இலங்கையில் ஆடை தொழிற்துறையில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே இந்த வீழ்ச்சியைத் தடுப்பதற்கு நாம் ஏனைய சர்வதேச சந்தைகளை நாட வேண்டும்.
அதேவேளை தற்போதுள்ள சந்தை வாய்ப்புக்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதனால் ஏற்படக் கூடிய குறுகிய கால பொருளாதார நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதோடு, அதற்கான நீண்ட கால திட்டமிடல்களையும் தயாரிப்பது அவசியமாகும். இது தொடர்பில் அரசாங்கமும் கொள்கை வகுப்பாளர்களும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டுமூ’’ என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் காமினி வீரசிங்க குறிப்பிட்டிருக்கிறார்.
‘’இலங்கை ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு நாட்டுக்கான ஏற்றுமதியில் தங்கியிருக்காமல் இந்தியா போன்ற நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பதால் இலங்கைக்கு பயன்தருவதாக அமையும். இதற்காக புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்துகொள்ளப்படுவதும் மிக அவசியமாகும்.
ஏற்றுமதியை பல்வகைப்படுத்த வேண்டும். ஒரு சில பொருட்களிலேயே தங்கியிருக்காமல் ஏற்றுமதி பொருள் பல்வகைப்படுத்தலுக்குள் பிரவேசிக்க வேண்டும். அப்போதுதான் இந்த நிலைமையை சமாளிக்க முடியும்’’ என்று பொருளாதார நிபுணர் ரொஹான் சமரஜீவ அண்மையில் தெரிவித்திருந்தமை கவனத்திற்கொள்ளப்படவேண்டும்.
நன்றி virakesari