Paristamil Navigation Paristamil advert login

தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுக்குள் அத்துமீறிய சுற்றுலாப்பயணி- கிடைக்கவிருக்கும் தண்டனை

தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுக்குள் அத்துமீறிய சுற்றுலாப்பயணி- கிடைக்கவிருக்கும் தண்டனை

7 சித்திரை 2025 திங்கள் 10:27 | பார்வைகள் : 120


இந்தியாவின் தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுப்பகுதிக்குள் அத்துமீறிய அமெரிக்க சுற்றுலாப்பயணிக்கு 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை வெளியுலகமே அறிந்திராத பூர்வகுடி மக்கள் வாழும் அந்தமான் பகுதியிலேயே 24 வயதான உக்ரைன் வம்சாவளி அமெரிக்க சுற்றுலாப்பயணி Mykhailo Viktorovych Polyakov அத்துமீறியுள்ளார்.

தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் பகுதிக்கே சனிக்கிழமை காலை ஒரு தேங்காய் மற்றும் டயட் கோக் டப்பாவை எடுத்துச் சென்றுள்ளார். அரிசோனாவைச் சேர்ந்த பாலியாகோவ், திங்கள்கிழமை மாலையில் கைது செய்யப்பட்டார்.

உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலும் விசாரணைக்காக மூன்று நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து பொலிசார் ஒரு GoPro கமெராவை பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் பகுதியில் அத்துமீறியுள்ளதால், 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கலாம் என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, சென்டினல் தீவுக்குள் நுழைய முயற்சித்தவர்களுக்கு உதவிய எந்தவொரு உள்ளூர்வாசிகளையும் இந்திய அதிகாரிகள் தண்டித்துள்ளனர்.

தற்போது பாலியாகோவ் விவகாரத்திலும் உள்ளூர் மக்கள் உதவியுள்ளார்களா என விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்வ மிகுதியால் வடக்கு சென்டினல் பகுதிக்கு புறப்பட்டதாகவே பாலியாகோவ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் காணொளி ஒன்றை பதிவு செய்து தமது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பாலியாகோவ் மார்ச் 26 அன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேருக்கு சென்றுள்ளார்.

மார்ச் 28ம் திகதி அதிகாரிகளுக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் படகு ஒன்றில் தடை செய்யப்பட்ட வடக்கு சென்டினல் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து அடுத்த நாள் பகல் கரைக்கு திரும்பியுள்ளார். வடக்கு சென்டினல் பகுதியில் சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே அவர் செலவிட்டுள்ளார்.

மதியம் 1 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 7 மணிக்கு கூர்மா தேரா கடற்கரையை அடைந்துள்ளார்.

உள்ளூர் மீனவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே இரண்டு நாட்களுக்கு பிறகு பாலியாகோவ் கைதாகியுள்ளார்.

சுமார் 150 பேர்கள் மட்டுமே வசிக்கும் வடக்கு சென்டினல் தீவில் உள்ள மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில், இந்திய கடற்படை கூட அங்கு நுழைய அனுமதிக்கப்படவில்லை.

சென்டினல் பூர்வகுடி மக்களுடன் எந்த தொடர்பும் வைத்திருப்பது சட்டவிரோதமானது, மேலும் அந்தமான் பூர்வகுடி மக்களைப் புகைப்படம் எடுப்பதோ அல்லது வீடியோ எடுப்பதோ கூட மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

சென்டினல் மக்கள் 55,000 ஆண்டுகளாக காடுகள் நிறைந்த சிறிய தீவில் வெளியுலகத் தொடர்பேதும் இல்லாமல் வசித்து வருகின்றனர்.

அந்தமான் தீவுகளில் 400 பேர் கொண்ட ஜராவா பூர்வகுடி மக்களும் வசிக்கின்றனர், அவர்கள் வெளியாட்களின் தொடர்புகளாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்