அதிக நன்கொடை வாங்கிய கட்சி: முதலிடத்தை பிடித்தது பா.ஜ.,

8 சித்திரை 2025 செவ்வாய் 12:51 | பார்வைகள் : 291
கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், அதிக நன்கொடை பெற்ற கட்சியாக, பா.ஜ., விளங்குகிறது. அந்த கட்சி, 2,243 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.
ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள், தனிநபர்களிடம் இருந்து, 20,000 ரூபாய்க்கு அதிகமாக பெற்ற நன்கொடை பட்டியலை, தேர்தல் கமிஷனுக்கு கட்சிகள் அனுப்பியுள்ளன. அதன்படி, அதிகபட்சமாக பா.ஜ., 2,243 கோடி ரூபாய் நன்கொடைகளை பெற்றுள்ளது.
அதற்கு அடுத்த இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, 281 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இவ்வாறு, 12,547 பேர் அல்லது நிறுவனங்களிடம் இருந்து, 2,544.28 கோடி ரூபாயை, நம் நாட்டின் கட்சிகள் பெற்றுள்ளன.
மிகவும் குறைவான அளவில் நன்கொடை பெற்றதாக ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி போன்றவை குறிப்பிட்டுள்ளன. அதே நேரத்தில், கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும், ஒரு பைசா கூட நன்கொடை பெறவில்லை என, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது.
அதிக அளவில் நன்கொடை வழங்கிய நிறுவனமாக, புருடென்ட் எலக்ட்ரால் டிரஸ்ட் என்ற நிறுவனம், 880 கோடி ரூபாயை, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியுள்ளது. பா.ஜ.,வுக்கு அந்த அமைப்பு, 723 கோடி ரூபாய், காங்கிரசுக்கு 156 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில், டிரையம்ப் எலக்ட்ரால் பண்ட் என்ற நிறுவனம், 127 கோடி ரூபாயை, பா.ஜ.,வுக்கு வழங்கியுள்ளது.