இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து - 4 பேர் பலி

8 சித்திரை 2025 செவ்வாய் 04:13 | பார்வைகள் : 764
இலங்கையில், குருநாகல் -வெஹெரவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய எரிவாயு வெடிப்பில், எரிபொருள் நிலையத்தின் முகாமையாளர் உட்பட 4 பேர், தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
மேலும் 4 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 11.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாரஊர்தி ஒன்றுக்கு சமையல் எரிவாயுவை நிரப்பும் செயல்பாட்டின் போது, 6,000 லிட்டர் எரிவாயுவைக் கொண்டிருந்த இரண்டு எரிவாயு கொள்கலன்களில் ஒன்று வெடித்து, பாரிய தீவிபத்து ஏற்பட்டது.
பயிற்சி பெறாத தொழிலாளி எரிவாயு பரிமாற்ற நடைமுறையை தவறாக கையாண்டதால் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எரிபொருள் நிலைய முகாமையாளர் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள், தொட்டி வெடித்தபோது நிரப்பும் செயல்முறையில் ஈடுபட்டிருந்தனர் என்று நம்பப்படுகிறது.
குருநாகல் மாநரை சபையின் தீயணைப்புப் பிரிவு, குருநாகல் பொலிஸ் மற்றும் இலங்கை இராணுவத்தின் அவசர குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று , சுமார் இரண்டரை மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இரண்டாவது எரிவாயு தொட்டியை பாதுகாக்க முடிந்தது, மேலும் அழிவைத் தடுக்க உதவியுள்ளது.
வெடிப்பு இடம்பெற்று சுமார் 1/2 மணித்தியாலங்களின் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டதுடன், உயிரிழந்தவர்களின் எரிந்த எச்சங்கள் மீட்கப்பட்டன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.