டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

8 சித்திரை 2025 செவ்வாய் 14:54 | பார்வைகள் : 279
டாஸ்மாக் வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, உச்சநீதிமன்றத்திற்கு செல்வதாக கூறி இருந்தால் விசாரணைக்கு பட்டியலிட்டு இருக்க மாட்டோம் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை எதிராக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய புதிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை, சென்னை ஐகோர்ட்டில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐகோர்ட்டில் இன்று (ஏப்ரல் 08) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதா? என சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, மாநில அரசின் உரிமைக்காக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தோம். அதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:
* வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, உச்சநீதிமன்றத்திற்கு செல்வதாக கூறி இருந்தால் விசாரணைக்கு பட்டியலிட்டு இருக்க மாட்டோம்.
* குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.
* பொதுநலனுக்காக மனுத்தாக்கலா? சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக மனு தாக்கலா?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.