போபண்ணா உலக சாதனை - சீனியர் வீரராக அசத்தல்

8 சித்திரை 2025 செவ்வாய் 09:52 | பார்வைகள் : 623
ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் தொடரில் வெற்றி பெற்ற சீனியர் வீரர் என உலக சாதனை படைத்தார் போபண்ணா.
மொனாக்கோவில் ஏ.டி.பி., 'மாஸ்டர்ஸ் 1000' சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஜோடி, அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ, சிலியின் அலெக்சாண்ட்ரோ ஜோடியை சந்தித்தது.
ஒரு மணி நேரம், 11 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், போபண்ணா ஜோடி 6-3, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
இதையடுத்து ஏ.டி.பி., 'மாஸ்டர்ஸ் 1000' அந்தஸ்து பெற்ற தொடரில் ஒற்றையர் அல்லது இரட்டையர் போட்டியில், வெற்றி பெற்ற, உலகின் மூத்த வீரர் என போபண்ணா (45 வயது, 1 மாதம்) உலக சாதனை படைத்தார்.
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் சுமித் நாகல், ஒற்றையர் பிரிவில் 18 இடம் பின்தங்கி 144வது இடத்தில் உள்ளார்.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 28, போபண்ணா 43, ஸ்ரீராம் பாலாஜி 61வது இடங்களில் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் இந்திய அளவில் அன்கிதா ரெய்னா (304), சஹாஜா (316), ஸ்ரீவள்ளி ராஷ்மிகா (345), வைதேகி (364) உள்ளிட்டோர் 'டாப்-4' இடத்தில் உள்ளனர்.