புலம்பெயர்வோரை எல்லையிலேயே தடுத்து நிறுத்த திட்டமிடும் ஜேர்மனியின் புதிய அரசு

8 சித்திரை 2025 செவ்வாய் 15:21 | பார்வைகள் : 1296
ஜேர்மனியில் அடுத்து அரசு அமைக்கவிருக்கும் கட்சிகள், புலம்பெயர்தல் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர திட்டமிட்டுவருகின்றன.
ஜேர்மனியில் புதிய அரசு அமைப்பது தொடர்பில் கன்சர்வேட்டிவ் மற்றும் சோஷியல் டெமாக்ரட்ஸ் கட்சிகள் தீவிர பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன.
புகலிடக்கோரிக்கையாளர்களைக் கையாளும் விடயம், அரசு அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய விடயங்களில் ஒன்றாகியுள்ளது.
புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டுவரும் அரசியல் கட்சிகள், புலம்பெயர்வோரை எல்லையிலேயே தடுத்து நிறுத்துவது முதலான கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது குறித்தும் பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஜேர்மனிக்குள் கால்வைக்கும் ஒருவர், பாதுகாப்பான நாடு ஒன்றிலிருந்து வருவாரானால், அவருக்கு பாதுகாப்பு வழங்குவது அவசியமில்லை என்னும் ரீதியில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
என்றாலும், இந்த கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளதுடன், சட்டபடி இது சாத்தியமா என்பதும் தெரியவில்லை. அதை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.
ஆக, புதிய அரசு பதவியேற்றபின், ஜேர்மனியில் புகலிடம் கோருவது கடினமான விடயமாகிவிடக்கூடும் என்கின்றன ஊடகங்கள்.