இந்தியாவின் உள்நாட்டு தேவை: நிர்மலா சீதாராமன் பெருமிதம்

9 சித்திரை 2025 புதன் 09:26 | பார்வைகள் : 892
அமெரிக்க அரசின் வரி விதிப்புகளால், இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு இல்லாத அளவுக்கு தற்காத்து கொள்வது, அதன் உள்நாட்டு தேவையே. அது தான் காந்தமாக, உலக வினியோகத்தை ஸ்திரமாக்கி, பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதற்கட்டமாக, லண்டன் நகரில் இன்று பிரிட்டனுடன் அமைச்சர்கள் மட்டத்திலான, பொருளாதாரம் மற்றும் நிதி பேச்சு நடத்த உள்ளார். லண்டனில் உள்ள இந்திய துாதரக அலுவலகத்தில், 'வரும் 2047ல் வளர்ந்த பொருளாதார நாடாக மாற இந்தியா எதிர்கொள்ளும் சவால்களும், வாய்ப்புகளும்' என்ற தலைப்பில் நேற்று அவர் பேசியதாவது:
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடு என்ற பெருமையை பெற்றுள்ள இந்தியா, அந்த பெயரை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக பாடுபடுகிறது. எங்களின் வளர்ச்சி உள்நாட்டு நுகர்வு அடிப்படையிலானது. உலக தரத்திலான பொருட்களுக்கு எப்போதுமே எங்கள் நாட்டில் தேவை உள்ளது.
நீண்ட காலமாக இந்தியாவின் வர்த்தக பங்குதாரர் நாடாக அமெரிக்கா விளங்குகிறது. வரி விதிப்புகள் தான், வர்த்தகத்தை தீர்மானிக்கிறது எனும் போது, அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள வரி விதிப்புகளால், இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லாத அளவுக்கு தற்காத்து கொள்வது எங்களின் உள்நாட்டு தேவையே. அது தான் காந்தமாக உலக வினியோகத்தை ஸ்திரமாக்கி, பொருளாதாரத்தில் ஊக்கமும் ஏற்படுத்துகிறது.
இந்தியாவின் பலமான உள்நாட்டு தேவையே, வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் சர்வதேச உற்பத்தி வினியோக உள்நாட்டு சந்தையையும், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியையும் கவர்கிறது.
வளமான சந்தையாக இந்தியா விளங்குவதாக கருதுவதால் தான், உலக அளவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பாதிப்பு, இந்தியாவை பெரிய அளவில் பாதிக்கவில்லை. எனினும், உலக அளவில் நிலவும் பொருளாதார ஒன்றிணைப்பு, இந்தியாவிலும் சில பாதிப்புகளை ஏற்படுத்தத் தான் செய்கின்றன.
அமெரிக்காவின் வரி விதிப்புகளால் தான், பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்தியா முனைகிறது என்றில்லை. இந்த பேச்சு, நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.