பயங்கரவாதி தஹாவூர் ராணாவை திகார் சிறையில் அடைக்க திட்டம்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

10 சித்திரை 2025 வியாழன் 07:03 | பார்வைகள் : 942
அமெரிக்காவில் இருந்து இன்று ஏப்ரல் 10 இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணா திகார் சிறையில் அடைக்கப்படுவார்'' என என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் 2008 நவம்பரில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை திட்டமிட்டவர்களில், பாக்., வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லியும் ஒருவர்.
பயங்கரவாதியான இவருக்கும், இந்த தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் அமைப்புக்கும் உதவியதாக, பாக்., வம்சாவளியைச் சேர்ந்தவரும், வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த தொழிலதிபருமான தஹாவூர் ராணா மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில், 2013ல், ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராணாவை நாடு கடத்தும்படி அமெரிக்கா விடம் மத்திய அரசு கோரிக்கை வைத்தது.
இது தொடர்பான மனுவை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள், அவரை நாடு கடத்த ஒப்புதல் அளித்தன. தஹாவூர் ராணாவை நாடு கடத்தி அழைத்து வர, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்பின் அதிகாரிகள் சமீபத்தில் அமெரிக்கா சென்றனர்.
நேற்று, நம் அதிகாரிகளிடம் ராணாவை அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைத்தனர். சட்ட நடைமுறைகள் முடிந்து, அவரை தனி விமானத்தில் நம் அதிகாரிகள் அழைத்து வருகின்றனர். அவர் இன்று (ஏப்ரல் 10) மதியம் டில்லிக்கு அழைத்து வரப்பட உள்ளார்.
இதையடுத்து, தஹாவூர் ராணா டில்லியில் உள்ள சிறப்பு என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். வழக்கு இப்போது டில்லியில் விசாரிக்கப்படுவதால் அவர் மும்பைக்கு அனுப்பப்பட மாட்டார். ராணா திகார் சிறையில் அடைக்கப்படுவார் என என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். டில்லி திகார் சிறையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அமித்ஷா பெருமிதம்
''தஹாவூர் ராணாவை நாடு கடத்தியது பிரதமர் மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. குடிமக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது உறுதி செய்யப்படும். விசாரணை மற்றும் தண்டனையை எதிர்கொள்ள அவர் இங்கு கொண்டு அழைத்து வரப்படுகிறார்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.