இனி ஆதார் நகல் வேண்டாம்; வருகிறது புதிய செயலி

10 சித்திரை 2025 வியாழன் 09:06 | பார்வைகள் : 970
பல சேவைகளை பெறுவதற்கு, ஆதார் அட்டை நகல் தருவதை தவிர்த்து, டிஜிட்டல் முறையில் ஆதார் சரிபார்ப்பு வசதி வழங்கும் புதிய 'மொபைல் போன்' செயலி விரைவில் அறிமுகமாக உள்ளது.
தற்போது டி-ஜிட்டல் பரிவர்த்தனை செய்வது போல், க்யூ.ஆர்., கோடு வாயிலாக ஆதார் தகவல்களை வழங்க முடியும்.
சேவைகளை பெறுவதற்கு ஆதார் சரிபார்ப்பதை எளிமையாக்கும் வகையில், புதிய மொபைல் போன் ஆப் எனப்படும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பரிசோதனையில் உள்ள இந்த செயலியை டில்லியில் அறிமுகம் செய்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:
ஹோட்டல்களில் அறை முன்பதிவு செய்வது, பயணச்சீட்டு வாங்குவது என, பல சேவைகளுக்கு ஆதார் தேவைப்படுகிறது. அந்த சேவையை வழங்கும் நிறுவனங்கள், ஆதாரை சரிபார்ப்பதற்காக, அதன் நகலை கேட்பர்.
இவ்வாறு ஆதாரின் நகல் கொடுக்கும்போது, அதை வைத்து மோசடி நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகையிலும், ஆதார் சரிபார்ப்பை எளிமையாக்கும் வகையிலும் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையத்துடன் இணைந்து இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு ஒரு சில இடங்களில் மட்டும் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த சோதனைகள் முடிந்து, மிக விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும்.
தற்போது கடைகளில் நாம் வாங்கும் பொருட்களுக்கு, மொபைல் போன் வாயிலாக டிஜிட்டல் வடிவில் பணம் செலுத்துகிறோம். அதுபோல, ஆதார் சரிபார்ப்பதும் எளிமையாகிவிடும்.
க்யூ.ஆர்., கோடு வாயிலாக அல்லது முகத்தை அடையாளம் காட்டும் வசதியுடன் இதை செய்ய முடியும். சில வினாடிகளில் ஆதாரை சரிபார்க்க முடியும். முழுக்க முழுக்க டிஜிட்டல் வடிவில் உள்ளதால், இதில் மோசடிகளோ, தகவல்களை திருடுவது, போலியாக மாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை.
ஆதார் அட்டையையோ அல்லது நகலையோ கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும் என்பதால், தனிநபர் தகவல்களும் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், ஒருவருடைய அனுமதி பெற்றே, அவருடைய ஆதார் சரிபார்ப்பு நடப்பதால், மிகவும் பாதுகாப்பானது.
இவ்வாறு அவர் கூறினார்.