அமெரிக்காவின் சட்ட மசோதாவால் 3 லட்சம் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு

10 சித்திரை 2025 வியாழன் 10:08 | பார்வைகள் : 197
அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்தவுடன் செயல்முறை அனுபவத்துக்காக மூன்று ஆண்டுகள் வரை பணிபுரிய வகை செய்யும் திட்டத்தை நீக்க புதிய மசோதாவை அந்நாட்டு அரசு கொண்டுவர உள்ளது. இதனால் மூன்று லட்சம் இந்திய மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றார். அவர் அமெரிக்கர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் குடியேற்ற கொள்கைகளில் மாற்றங்கள் செய்து வருகிறார்.
அதில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பது மற்றும் விசா வாயிலான சட்டப்பூர்வ குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது ஆகியவையும் அடங்கும். சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை சொந்த நாட்டுக்கு அமெரிக்கா திருப்பி அனுப்பி வருகிறது.
அதே போல் எச்.1பி விசா மற்றும் மாணவர்களுக்கான எப்.1 விசாக்களுக்கு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை டிரம்ப் விதித்துள்ளார்.
அமெரிக்காவின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளில் பட்டப்படிப்பு மேற்கொள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு எப்.1 விசா வழங்கப்படுகிறது.
இதில் குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடிந்த பின்னும் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி செயல்முறை பயிற்சி என்ற பெயரில் வேலை பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இந்திய மாணவர்களே அதிகம் பயன் அடைகின்றனர். 2023 --- 24 கல்வியாண்டில் 97,556 மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்துள்ளனர். பட்டப்படிப்புக்கு பெற்ற லட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கடனை இவ்வாறு பணி செய்தே பலரும் அடைக்கின்றனர்.
தற்போது இந்த திட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதாவை டிரம்ப் அரசு பார்லிமென்டில் கொண்டுவர உள்ளது. இந்த மசோதா சட்டமாக மாறினால் அமெரிக்காவில் படித்து வரும் மூன்று லட்சம் மாணவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ஆகும்.
கார்னெல், கொலம்பியா, யேல் போன்ற பல்கலைகள் வெளிநாட்டு மாணவர்கள் கோடை விடுமுறைக்கு சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளது.
திரும்ப அமெரிக்காவுக்கு வர அனுமதி மறுக்கப்படலாம் என்ற காரணத்தால் பல மாணவர்கள் தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.
இவர்கள் இனி எச்.1பி விசாவுக்கு மாற வேண்டும். இந்த விசா ஆண்டுக்கு 85,000 வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே போட்டி அதிகம். பணி அனுபவம், அதிக திறன் மற்றும் அதிக சம்பளம் இருப்பவர்களுக்கே பெரும்பாலும் இந்த விசா கிடைக்கும்.