Paristamil Navigation Paristamil advert login

ஈ.டி., ஒரு விசாரணை அமைப்பு தான்.. விருப்பம்போல் செயல்பட முடியாது: டாஸ்மாக்

ஈ.டி., ஒரு விசாரணை அமைப்பு தான்.. விருப்பம்போல் செயல்பட முடியாது: டாஸ்மாக்

10 சித்திரை 2025 வியாழன் 12:11 | பார்வைகள் : 399


அமலாக்கத் துறை என்பது ஒரு விசாரணை அமைப்புதான்; தங்கள் விருப்பத்துக்கு செயல்படக் கூடாது' என, டாஸ்மாக் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில், இரண்டாம் நாளாக நேற்று நடந்தது.

டாஸ்மாக் நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி வாதாடியதாவது: திட்டமிடப்பட்ட குற்றங்கள் எதுவும் இல்லாத நிலையில், எதற்காக சோதனை என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை. சோதனை மற்றும் பறிமுதல் செய்வதற்கான காரணங்களை, பாதிக்கப்பட்ட நபரிடம் தெரிவிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது; அதையும் பின்பற்றவில்லை.

அமலாக்கத் துறை என்பது காவல் துறை அல்ல; அவர்கள் எந்த வளாகத்திலும் சோதனை நடத்தி, வழக்கு தொடர முடியாது. டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களை, நள்ளிரவு வரை காவலில் வைத்திருந்ததன் வாயிலாக, அமலாக்கத் துறை, அவர்களின் தனியுரிமையை மீறியுள்ளது.

மேலும், 60 மணி நேரம் வரை விசாரணை நடத்தியுள்ளது. அதிகாரிகள், ஊழியர்களின் மொபைல் போன், 'ஹார்டு டிஸ்க்' தரவுகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. ஒரு சில அதிகாரிகளை துாங்க விடாமல் செய்தது, மனித உரிமை மீறல். இதுபோன்ற தனியுரிமை மீறலுக்கான எந்த காரணமும், அமலாக்கத் துறையால் வெளியிடப்படவில்லை. இந்த வழக்கில் தங்களிடம் என்ன ஆவணங்கள் உள்ளன என்பதை, அமலாக்கத் துறை தெரிவிக்க வேண்டும்.

அமலாக்கத் துறை நீதியின் பாதுகாவலர் இல்லை; ஒரு விசாரணை அமைப்புதான். சட்டத்தை மதிக்காமல், தங்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட முடியாது. சோதனையின்போது ரகசியம் எனக் கூறி, எந்த விபரங்ளையும் தர மறுத்தவர்கள், சோதனை முடிந்த பின் அறிக்கை வெளியிட்டதன் நோக்கம் என்ன? இவ்வாறு அவர் வாதாடினார்.

டாஸ்மாக் தரப்பு வாதம் முடியாததால், விசாரணை வரும் 15க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்