2028 ஒலிம்பிக்கில் இடம்பெரும் கிரிக்கெட் - 6 அணிகளுக்கு அனுமதி

10 சித்திரை 2025 வியாழன் 10:17 | பார்வைகள் : 602
ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
கடந்த 2024 ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து முடிந்துள்ள நிலையில், 2028 ஒலிம்பிக் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக் போட்டியில், 128 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டி இடம் பெற உள்ளது.
ஏற்கனவே 1900 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றது.
இதில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகள் மட்டுமே பங்கு பெற்றதில், 158 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தங்க பதக்கம் வென்றது.
லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்கில், 20 ஓவர் முறையில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஒலிம்பிக் குழு முடிவெடுத்துள்ளது.
இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில், 6 அணிகள் இடம்பெறும் என்றும், ஒரு அணிக்கு 15 வீரர்கள் வரை மொத்தம் 90 பேரை அழைத்து வரலாம் என கூறப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில், இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, வங்க தேசம், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 முழு நேர உறுப்பினர்களும், 96 அசோசியேட் உறுப்பு நாடுகளும் உள்ளன.
போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் அமெரிக்கா இடம்பெறும், மற்ற அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.