கலவன் பாடசாலைகளில் கல்விச் சமூகமயமாக்கல்

10 சித்திரை 2025 வியாழன் 13:51 | பார்வைகள் : 383
கல்வி இல்லாமல் எந்த சமூகமும் முன்னேற முடியாது. ஆனால், பாரம்பரிய கல்வி முறைகள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்க முடியாமல் போகும்போது கலவன் பாடசாலைகளும் கல்வி, சமூகமயமாக்கலும் பெரும் பங்கினை வகிக்கின்றன.
இவை சமூகத்தில் சமமான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தி கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்கின்றன.
குறிப்பாக, ஆண் - பெண் இரு பாலாருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதோடு, ஒரே பாடசாலையில் கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் விதத்தில் கலவன் பாடசாலைகள் எழப்பெற்றமையினை குறிப்பிட முடியும்.
கல்வி சமூகமயமாக்கலில் மாணவர்களை சமூகமயப்படுத்துவதில் இத்தகைய கலவன் பாடசாலைகள் அதிகளவு செல்வாக்கு செலுத்துகின்றன.
சமூக எதிர்பார்ப்புகளுக்கேற்ப பாடசாலைகள் செயற்பட வேண்டும். கலவன் பாடசாலை செயற்பாடுகள் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பயனளிப்பதுடன் அவர்களின் எதிர்பார்ப்பினையும் நிறைவேற்றுகின்றன.
இத்தகைய பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி சார்ந்த செயற்பாடுகள் அவர்களது வாழ்வினை சீர்மையடையச் செய்கின்றன.
இத்தகைய கலவன் பாடசாலைகளில் ஆண் மற்றும் பெண் இரு பாலின மாணவர்களும் காணப்படுவதனால் பாலின பாகுபாடுகளை குறைத்து இரு பாலாருக்குமிடையே உள்ள சமத்துவத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் வாயிலாக மாணவர்கள் சக மாணவர்களோடு ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் செயற்படுகின்ற தன்மையினை கூறலாம்.
இத்தகைய கலவன் பாடசாலைகள் மாணவர்களுக்கு சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டினை கற்பிப்பதற்கு சிறந்த இடமாக காணப்படுகின்றன.
இரு பாலினரும் இணைந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு கலவன் பாடசாலைகள் அடித்தளமிடுகின்றன.
டர்கயிம் என்ற சமூகவியலாளர் கூறுகையில், கல்வி நிறுவனம் ஒன்றின் முக்கிய நோக்கமாக, எதிர்கால பொறுப்புகளை ஏற்கக்கூடிய விதத்தில் மாணவர்களின் சமூகமயமாக்குதல் இருக்க வேண்டும் என்கிறார்.
அதனைப் போன்று கலவன் பாடசாலைகள் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து சமத்துவத்தினை ஊக்குவிப்பதற்கும் கல்விக்கான சிறந்த அணுகலினை வழங்குவதற்கும் கலவன் பாடசாலைகள் முன்னிற்கின்றன என்ற கூற்றினை முஸ்தபா 2023ஆம் ஆண்டு தனது கலப்பு பாலின பாடசாலைகள் பற்றிய ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு பண்டைய கிரேக்க தத்துவஞானியான பிளேட்டோ கூறுகையில், “கூட்டுக்கல்வியானது தோழமை உணர்வினை உருவாக்குகிறது” என்கிறார்.
கல்வி கற்பதில் எந்தவொரு பாகுபாடும் காட்டாமல் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் கற்பித்தலை மேற்கொள்வதை அவதானிக்க முடிகிறது. தாங்கள் ஒரே மாதிரியான இயல்புகள் காணப்படாதவிடினும் அவர்கள் சமமானவர்கள் அவர்களுக்குள் எந்தவித பாகுபாடும் இல்லை என்பதை புரிந்துகொண்டு செயற்படும் தன்மையினை அறிந்துகொள்ள முடியும்.
இங்கு மாணவர்கள் பாடசாலையில் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடும்போது இரு பாலாருக்கும் இடையில் ஐக்கிய மேம்பாடு காணப்படுகிறது.
இத்தகைய விளையாட்டு ஏற்பாடுகள் மூலம் பிள்ளைகளிடம் நற்பண்புகள் மேலோங்குவதுடன் விட்டுக்கொடுப்பு, தலைமைக்கு கட்டுப்படும் பண்பு, விதிகளை கடைபிடித்தல், வெற்றி - தோல்விகளை சமமாக மதிக்கும் தன்மை போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன.
இத்தகைய செயற்பாடுகளின் வாயிலாக இரு பாலாரும் நட்புறவுடன் செயற்படும் ஆற்றலும் விதைக்கப்படுகிறது.
மாணவர்கள் கூட்டுக்கற்றலில் ஈடுபடவும் தங்களின் தனிப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வகுப்பறையில் இரு பாலாரும் இணைந்து சமூகத்தின் பன்முகத் தன்மையினை பிரதிபலிக்கும் சமநிலையை ஊக்குவிக்கிறது.
ஏனையோருடன் பிள்ளைகள் கலந்தாலோசித்து ஒரு முடிவினை எடுக்கும் பட்சத்தில் மாணவர்களுடைய தோழமை உணர்வு கட்டியெழுப்பப்படுகிறது.
“ஒரு செயற்பாட்டினை இரு பாலாரும் முன்னெடுத்துச் செய்யும்போது மாணவர்களிடையே ஏற்படுகின்ற தலைமைத்துவ வளர்ச்சி இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது” என The journal of School leadership என்ற அறிக்கையில் ரோஜர் பேக்கன் 2019ஆம் ஆண்டளவில் குறிப்பிட்டுள்ளார்.
இரு பாலினரும் ஒன்றாக சேர்ந்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஒரு புதிய பரிணாமம், மரியாதை மற்றும் சகிப்புத்தன்மையின் அடிப்படையில் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக கலவன் பாடசாலைகள் அமைந்துள்ளன என்பதனை ஓக்லெட்ரீ 2004ஆம் ஆண்டு தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
கலவன் பாடசாலைகள் சமூக தொடர்பு மற்றும் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது எனலாம். குறிப்பாக, கலவன் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் ஓரின பாலின பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.
கலவன் பாடசாலைகளில் சக நண்பர்களோடு தோழமை உணர்வுடனும் நட்புறவுடனும் செயற்பாடுகளில் இணைந்து திறம்பட இயங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஆனால், ஓரின பாடசாலைகளில் ஒத்த பாலினத்தவர்களோடு இணைந்து செயலாற்றும்போது அங்கு கல்வி பயிலும் மாணவர்களில் ஒருவித சகிப்புத்தன்மையற்ற குணத்தை காண முடியும். தனித்த மகளிர் பாடசாலைகள் எனில், ஆண் பிள்ளைகளுடனான புரிந்துணர்வுகள் பெண் பிள்ளைகளிடம் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுகின்றன.
இவ்வாறான மாணவர்கள் பாடசாலைக் கல்வியினை பூர்த்தி செய்து பிறிதொரு கற்றல் சூழலுக்குள் நுழைகின்றபோது பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திக்கின்ற சூழ்நிலைகள் ஏற்படக்கூடும்.
இன்று இத்தகைய மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று உயர்கல்வியினை கற்கும் போது எதிர்ப்பாலின மாணவர்களுடன் பழகுவதில் கூச்ச சுபாவம் உடையவர்களாக காணப்படுகின்றனர்.
இத்தகைய சூழலில் மாணவர்கள் அவர்கள் படித்த பாடசாலைகளை மையப்படுத்திக்கொண்டே அவர்களின் செயற்பாடுகள் இடம்பெறுவதை குறிப்பிடலாம்.
குறிப்பாக, ஓரின மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலையின் மாணவர்கள் எதிர்ப்பாலின மாணவர்களுடன் நட்பு, புரிந்துணர்வு, தோழமை உணர்வுடன் செயற்படாமைக்கான காரணம், அவர்கள் ஏனைய பாலினத்தவர்களோடு இணைந்து கடந்த காலங்களில் செயற்படாமையே ஆகும்.
அதுமட்டுமின்றி, இத்தகைய பிள்ளைகள் புதிதாக கற்றல் சூழலுக்கு உள்வாங்கப்படும்போது பெண்கள் ஆண்களின் கருத்துக்களுக்கும் ஆண்கள் பெண்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்காத தன்மை மற்றும் அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுகின்ற தன்மையினை சமூகத்தில் காண முடிகிறது.
அத்தோடு ஏதேனும் குழுச் செயற்பாடுகள் முன்னெடுக்கின்ற வேளையில் மாணவர்கள் ஒன்றாக இணைந்து செயற்பட தயங்குகின்ற நிலையினை காணலாம். இவ்வாறு இரு பாலினத்தவர்களும் ஒன்றாக இணைந்து கல்வி கற்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லையாயின், அந்த மாணவர்கள் பாலினக் கேலி சுரண்டலுக்கு உள்ளாகும் நிலையும் ஏற்படக்கூடும்.
அவ்வாறன்றி, கலவன் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவராயின், அவர் ஏனைய மாணவர்களோடு தோழமை உணர்வுடன் பழகி, பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் ஆளுமையும் ஆற்றலும் கொண்டவராக திகழ முடியும்.
ஆகவே, இவ்வாறான பல ஆக்கத்திறன் மிக்க செயற்பாடுகள் கலவன் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும்போது மாணவர்கள் தமது ஆற்றல் மற்றும் திறன்களை வெளிப்படுத்துவதற்கு வழிகாட்டுகிறது. அத்தோடு எந்தவொரு பாகுபாடுமின்றி இரு பாலாரும் சமத்துவ தன்மையோடு இயங்குவதை குறிப்பிடலாம்.
கலவன் பாடசாலையும் கல்விச் சமூகமயமாக்கலும் ஒன்றுடன் ஒன்று இணைந்த, சமூகத்துக்கு தேவையான கல்வி நோக்கங்களை உருவாக்கும் முழுமையான திட்டமாக விளங்குகின்றன.
மாணவர்களை சமூக சேவையாளராகவும் பொறுப்புள்ள நற்பிரஜையாகவும் மாற்ற உதவி புரிகின்றன. மாணவர்கள் தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு சமூகத் திறன்களில் தேர்ச்சி பெற்று பயிற்சி பெறுவதற்கும், அவர்களிடத்தில் சிறந்த மனப்பான்மையினை கட்டியெழுப்புவதற்கும் கலவன் பாடசாலைகள் இன்றியமையாதவையாக காணப்படுகின்றன.
- ஷதுர்த்திகா ஜெயச்சந்திரன்,
(நான்காம் ஆண்டு கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி - கல்வி, பிள்ளைநலத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்)
நன்றி virakesari